IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?

IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 11, 2024, 03:56 PM IST
  • முதல் போட்டி வரும் அக். 16ஆம் தேதி தொடங்குகிறது.
  • நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
  • டெஸ்ட் தொடரை மட்டும் நியூசிலாந்து விளையாட உள்ளது.
IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?  title=

India vs New Zealand Test Series: வங்கதேச அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே 2 டெஸ்ட் போட்டிகள், 2 டி20 போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் நாளை (அக். 12) கடைசி மற்றும் 3ஆவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை கைப்பற்றிய குதூகலத்துடன் இந்திய அணி (Team India) அடுத்து நியூசிலாந்தை அணி எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணி (Team New Zealand) இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை (IND vs NZ Test Series) விளையாட உள்ளது. 

இந்திய அணிக்கும், நியூசிலாந்து அணிக்கு இது முக்கியமான தொடர் எனலாம். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு (WTC Final 2025) தகுதிபெற இந்திய அணி நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் வீழ்த்த வேண்டும். இன்னும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா தொடர் பாக்கியிருக்கிறது என்றாலும் உள்நாட்டிலேயே இந்த மூன்று போட்டிகளை வென்றுவிட்டால் ஆஸ்திரேலியாவில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் பார்ட்ர் கவாஸ்கர் கோப்பை தொடரை (Border Gavaskar Trophy) எவ்வித அழுத்தமும் இன்றி விளையாடலாம். 

நியூசிலாந்து மீது அதிக அழுத்தம்

மாறாக, இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றவது அவ்வளவு எளிதில்லை. அதுவும் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்துவிட்டு இந்தியாவுக்கு திரும்புவதால் நியூசிலாந்தின் மீது கடும் அழுத்தம் இருக்கும். நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் சௌதி விலகிய நிலையில், டாம் லாதம் அந்த பொறுப்பை பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி முதல் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவதும் சந்தேகம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது. எனவே, நியூசிலாந்து அணி இத்தனை அழுத்தங்களையும் சமாளித்து வெற்றியை குவிக்க போராடுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் ஒருமுறை கூட ரன் அவுட் ஆகாத பிளேயர்கள்

தாமதிக்கும் பிசிசிஐ... ஏன்?

இது ஒருபுறம் இருக்க, நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி ஸ்குவாட் இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இன்னும் 5 நாள்களே உள்ள நிலையில், பிசிசிஐ அணியை அறிவிக்க கடும் யோசனையில் இருப்பதாக தெரிகிறது. கடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஸ்குவாடை 10 நாள்களுக்கு முன்னரே பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், நியூசிலாந்து தொடருக்கு இன்னும் 5 நாள்களே இருக்கிறது. அந்த வகையில், இந்திய அணி ஸ்குவாட் அறிவிக்கப்படாமல் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 

யார் அந்த 16 பேர்?

ஏனெனில், வங்கதேசத்திற்கு எதிரான இந்திய டெஸ்ட் ஸ்குவாடுக்கும், அறிவிக்கப்பட இருக்கும் நியூசிலாந்து டெஸ்ட் ஸ்குவாடுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. 16 வீரர்களில் ஏறத்தாழ அதே 15 வீரர்கள்தான் இந்த நியூசிலாந்து தொடரிலும் இடம்பெறுவார்கள் என்பது உறுதி. ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad), அபிமன்யூ ஈஸ்வரன் (Abhimanyu Eashwaran) உள்ளிட்டோர் இன்று தொடங்கியிருக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் (Ranji Trophy 2024 - 2025) தத்தமது அணிகளில் விளையாடி வருவதால் அவர்கள் நிச்சயம் டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. மறுபுறம் யாஷ் தயாள் (Yash Dayal) வங்காள அணிக்காக விளையாடி வருவதால் அவரும் டெஸ்ட் தொடரில் இடம்பெறும் வாய்ப்பு இல்லை. யாஷ் தயாளுக்கு பதில் இந்திய அணி முகமது ஷமியை அணிக்குள் கொண்டுவர அதிக வாய்ப்புள்ளது. சர்ஃபராஸ் கானும் (Sarfaraz Khan) ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை என்பதால் அவர் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது தற்போது உறுதியாகியிருக்கிறது எனலாம்.

ஷமி விளையாடுவாரா மாட்டாரா?

மேலும், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி (Mohammed Shami) நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வியும் தீவிரமாக எழுந்துள்ளது. ஷமியின் உடற்தகுதி குறித்துதான் பிசிசிஐ தற்போது யோசனை செய்துகொண்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. பார்ட்ர் கவாஸ்கர் கோப்பை தொடரில் தான் நிச்சயம் விளையாடுவேன் என்றும் பிசிசிஐ தரப்பிலோ, தன்னுடைய தரப்பிலோ விளக்கம் வராத வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஷமி அதிரடியாக அறிக்கை ஒன்றை சில நாள்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட அவர் தயாரானாலும் உள்நாட்டில் ஓரிரு போட்டிகளை விளையாடுவதே, அதுவும் நியூசிலாந்து போன்ற பலமிக்க அணியுடன் விளையாடுவதே அவரின் ஃபார்மை நிரூபிப்பதற்கான களம் ஆகும். ஷமி வரும் நியூசிலாந்து தொடரில் விளையாடுவாரா மாட்டாரா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. பிசிசிஐ விரைவில் ஸ்குவாடை அறிவித்து இதற்கு பதிலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி ஸ்குவாட் (கணிப்பு): ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, ரவிசந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்

மேலும் படிக்க | ரத்தன் டாடாவிடம் சம்பளம் வாங்கி சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய இந்திய பிளேயர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News