FIFA World Cup 2022 : கால்பந்து உலகக்கோப்பையை எதில், எப்படி பார்ப்பது?

பிபா உலகக்கோப்பை தொடர் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் நாளை தொடங்க உள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : Nov 19, 2022, 02:58 PM IST
  • கத்தாரில் கால்பந்து ரசிகர்களுக்கு மைதானங்களில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • பிரபல கொரிய BTS இசைக்குழுவின் உறுப்பினர் தொடக்க விழாவில் பங்கெடுக்கிறார்.
  • மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
FIFA World Cup 2022 : கால்பந்து உலகக்கோப்பையை எதில், எப்படி பார்ப்பது? title=

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்பந்து ரசிகர்கள் தற்போது கத்தார் நாட்டில் முகாமிட்டு, தங்களின் ஒரு மாத பண்டிகையை முழுவதுமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். பிபா உலகக்கோப்பை 2022 தொடர் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 23ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. 32 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடரின் முதல் சுற்றில், எட்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 

ஒரு குழுவில் மொத்தம் 4 அணிகள் இருக்கும். ஒரு அணி தனது குழுவில் இருக்கும் அணிகளோடு தலா 1 முறை மோதும். பின்னர் புள்ளிப்பட்டியலின்படி, குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த சுற்றுக்கு மொத்தம் 16 அணிகள் தேர்வாகும். அதில், குழுக்கள் முறையில் போட்டிகள் முடிவு செய்யப்பட்டு, நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும். 

பின்னர், காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என தொடர் நிறைவுபெறும். இதில்,  பிபா உலகக்கோப்பை தொடர் முதன்முதலாக, மத்திய கிழக்கு நாட்டிலும், ஆசியாவில் இரண்டாவது முறையாகவும் நடைபெறுகிறது. 2002ஆம் ஆண்டில், ஜப்பான், தென்கொரியா நாடுகள் உலகக்கோப்பையை நடத்தியது. 

கலாச்சார கிடுக்குப்பிடி

கால்பந்து ரசிகர்களுக்கு என தனி கலாச்சாரம், பாரம்பரியம், கொண்டாட்ட முறைகள் உள்ள நிலையில், இஸ்லாமிய நாடான கத்தாரில் அவற்றில் பலவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, பெண் ரசிகர்கள் உடல் முழுவதும் மறைக்கப்பட்ட ஆடைகளை மட்டுமே அணிந்துவர வேண்டும் எனவும், ஸ்லீவ்லெஸ் உடையோ அல்லது உடல் தெரியும் உடைகளுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Jio வாடிக்கையாளர்கள் FIFA World Cup-ஐ இலவசமாகப் பார்க்கலாம்!

இருப்பினும், கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான அணிகளின் விளையாட்டை பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த முறை உலகக்கோப்பையை பிரேசில், அர்ஜென்டீனா, பிரான்ஸ், உள்ளிட்ட அணிகள் மீது எதிர்பார்ப்பு உள்ளது. 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடந்த உலகக்கோப்பையை பிரான்ஸ் கைப்பற்றியிருந்தது. கைலியன் இம்பாப்பே பிரான்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக விளங்குகிறார். பிரேசில் 5 முறையும், அர்ஜென்டீனா 1 முறையும் உலகக்கோப்பையை வென்றுள்ளன. 

மறுமுனையில், கால்பந்தின் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால் அவர்கள் மீதும் கவனம் அதிகமாகியுள்ளது. மெஸ்ஸி விளையாடியதில் இருந்து அர்ஜென்டினா உலகக்கோப்பையை வென்றதில்லை. தற்போது, அர்ஜென்டினா மிகவும் வலிமையாக உள்ள நிலையில், உலகக்கோப்பையுடன் மெஸ்ஸி விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடக்க விழாவை எங்கே அல்லது எப்படிப் பார்க்கலாம்?

பிபா உலகக்கோப்பையின் தொடக்க விழா இந்தியாவில் உள்ள Sports 18 நெட்வொர்க்கில் கிடைக்கும். இதை ஜியோ சினிமா செயலி மூலம் நேரடி ஒளிபரப்பில் காணலாம்.

தொடக்க விழாவில் பங்கேற்க இருக்கும் கலைஞர்கள் யார்?

தென் கொரியாவின் பிரபலமான BTS இசைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் பிபா உலகக்கோப்பை தொடக்க விழாவில் பங்கேற்கிறார். பிளாக் ஐட் பீஸ், ராபி வில்லியம்ஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில உலகக்கோப்பைகளாக பிரபல பாடகி ஷகீரா, உலகக்கோப்பையின் தொடக்க விழாவில் பாடிவந்தார். இம்முறை அவர் விழாவில் இடம்பெறவில்லை. 

நாளை நடைபெறும் முதல் போட்டியில், குரூப் 'ஏ'-வில் இடம்பெற்றுள்ள, தொடரை நடத்தும் கத்தார் அணியும், ஈக்வடார் அணியும் மோத உள்ளன. மேலும், தொடக்க விழா நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | FIFA ​உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான பரிசுத்தொகை அதிரடி அதிகரிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News