2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் டோனி சதம் எடுத்ததுடன் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

Last Updated : Jan 20, 2017, 08:32 AM IST
2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்தியா title=

கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் டோனி சதம் எடுத்ததுடன் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தார். 

இந்திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் தந்தது. வோக்ஸ் 'வேகத்தில்' தொல்லை தந்தார். இவரிடம் முதலில் லோகேஷ் ராகுல் (5) ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் கோஹ்லி 8 ரன்களில் அவுட்டானார். மீண்டும் வந்த வோக்ஸ், இம்முறை தவானை (11) வெளியேற்றினார். 

பின் இணைந்த யுவராஜ், டோனி ஜோடி பொறுப்புடன் செயல்பட்டது. ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த யுவராஜ் ஒரு நாள் போட்டியில் 14-வது சதத்தை பதிவு செய்தார். 

வோக்ஸ் பந்தை பறக்கவிட்ட டோனி சதம் எட்டினார். யுவராஜ் சிங் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதர் ஜாதவ் 22 ரன்கள் எடுத்தார். பிளங்க்ட் பந்தில் டோனி (134) ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் பாண்ட்யா, ஜடேஜா செயல்பட்டனர். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 381 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா (19), ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர். 

கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஹேல்ஸ் (14) ஏமாற்றினார். பின் இணைந்த ஜேசன் ராய், ஜோ ரூட் ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். ஜோ ரூட் 54 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 'சுழலில்' ஜேசன் (82) சிக்கினார். அஷ்வின் பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் (1), பட்லர் (10) அவுட்டாகினர். மொயீன் அலி (55) அரை சதம் கடந்தார். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மார்கன் சதம் அடித்தார். பும்ரா பந்தில் மார்கன் (102) ரன் அவுட்டானார். முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 366 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பிளங்கட் (26), வில்லே (5) அவுட்டாகாமல் இருந்தனர். 

இந்திய அணி சார்பில் அஷ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார். 

இதன் மூலம், இந்திய அணி 2- 0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் 22-ம் தேதி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது.

Trending News