மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி....
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையான முதல் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு (04/11/18) நடைபெற்றது. இத்தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா, தலைமையில் இந்தியா களம் கண்டது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ரோஹித், தவான், ரிஷப் பந்த் ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். பின்னர், மணீஷ் பாண்டே சற்று ஆறுதல் அளித்தாலும், அவரும் 19 ரன்களில், பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுமுனையில் தினேஷ் கார்த்திக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் கைகோர்த்த குர்ணால் பாண்டியா, அதிரடியாக ஆடியதால், ரன் வேகம் உயர்ந்தது.
17.5 ஓவர்களில் இந்தியா, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி, 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகள் வீழ்த்திய குல்தீப், ஆட்ட நாயகனாக தேர்வானார். மேலும், இரண்டாவது டி-20 போட்டி, லக்னோவில் நாளை (06/11/18) நடைபெறவுள்ளது.