இன்று 12வது ஐபிஎல் சீசனின் இறுதி நாள். இதுவரை 11 ஐபிஎல் சீசன் முடிந்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL தொடர் இன்றுடன் தனது 12வது சீசனை நிறைவு செய்கிறது.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் நுழைந்த அணிகள் எவை? வெற்றி பெற்ற அணி எது? என்பதை பார்ப்போம்.....!!
2008 இறுதிப்போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
முதல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ். கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தனர். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி கடைசி பந்தில் வெற்றிவாகையை சூடியது. அந்த அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
2009 இறுதிப்போட்டி: டெக்கான் சார்ஜர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இரண்டாவது ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், அனில் கும்ப்ளே தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்ததால், முதலில் ஹைதராபாத் அணி விளையாடியது. 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2010 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
மூன்றாவது ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து. பின்னர் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
2011 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
நான்காவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் சென்னை அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற சென்னை அணி 2வது முறையாக கோப்பையை வென்றது.
2012 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐந்தாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து முதல் முறையாக கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
2013 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
ஆறாவது ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் மீண்டும் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து. பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் மும்பை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.
2014 இறுதிப்போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs கிங்ஸ் XI பஞ்சாப்
ஏழாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் ஆடிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய கொல்கத்தா அணி 19.3 வது ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
2015 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
எட்டாவது ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் மீண்டும் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக மும்பை அணி கோப்பையை வென்றது.
2016 இறுதிப்போட்டி: சன்ரைஸ் ஹைதராபாத் vs பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
ஒன்பதாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும், பெங்களூர் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2017 இறுதிப்போட்டி: மும்பை இந்தியன்ஸ் vs புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்
பத்தாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியும் புனே அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய புனே அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது புனே அணி. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை அணி 3வது முறையாக கோப்பையை வென்றது.
2018 இறுதிப்போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைஸ் ஹைதராபாத்
11வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 18.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.