மும்பை: புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் தெரிவத்துள்ளார்.
கேப்டன் விராட் கோலியின் தலைமையில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, அந்தநாட்டுடன் மூன்று டி-20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் முதல் இரண்டு டி-20 போட்டி அமெரிக்காவின் லாடர்ஹில்லில் நடைபெற உள்ளது. மற்ற போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும். ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் இரு நாடுகளுக்கிடையே தொடங்க உள்ளது.
உலகக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான பதவி காலியாக உள்ளது. புதிய பயிற்சியாளருக்கான தேர்வு செயல்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பயிற்சியாளர் நியமிக்கப்படததால், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிகப்பட்டு உள்ளது. அதாவது 45 நாட்களுக்கு பதவி காலத்தை பிசிசிஐ நீட்டிப்பு செய்துள்ளது.
புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வந்துவிட்டன. 45 நாட்களுக்குள் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, ரவி சாஸ்திரியிடம் நல்ல நட்புறவுடன் இருக்கின்றோம். மீண்டும் அவர் பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், இதற்கு பதில் அளித்து பேசிய பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட், இந்திய அணிக்கு பயிற்சியாளர் தேர்வு செய்வதற்கு சில தகுதிகளை அடிப்படையாக வைத்து உள்ளோம். அந்த தகுதிக்கு ஏற்ப மீண்டும் ரவிசாஸ்திரி தேர்வானால் நிச்சயம் அவரை கணக்கில் கொள்வோம். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என அவர் கூறினார்.