சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி

இப்போது விராட் கோலி (Virat Kohli) விளையாடும் போதெல்லாம், சச்சின் டெண்டுல்கரின் ஏதாவது ஒரு சாதனைகளை தகர்த்து வருகிறார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Aug 15, 2019, 11:04 AM IST
சச்சின் டெண்டுல்கரின் மற்றொரு சாதனையை முறியடித்த விராட் கோலி
Photo: PTI

புதுடெல்லி: சில ஆண்டுகளுக்கு முன்பு, சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) களத்தில் இறங்கும்போது, ​​சில சாதனைகள் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு காலம் மிகவும் மாறிவிட்டது, இப்போது விராட் கோலி (Virat Kohli) விளையாடும் போதெல்லாம் ஏதாவது சச்சின் டெண்டுல்கரின் சில சாதனைகளை தகர்த்து வருகிறார். இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் நடந்த ஆட்டத்திலும் இதேதான் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி அற்புதமான சதம் அடித்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் பெயரில் பதிவு செய்யப்பட்ட சாதனை, விராட் கோலியின் பெயருக்கு மாறியது.

இந்தியாவிற்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை (ஆகஸ்ட் 14) ஸ்பெயின் துறைமுகத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி நடைபெற்றது. மழை காரணமாக மேற்கிந்திய தீவுகள் இன்னிங்ஸை இரண்டு முறை நிறுத்த வேண்டியிருந்தது. இதன் காரணமாக ஆட்டம் 50-50 ஓவர்களில் இருந்து 35-35 ஓவர்களாக குறைக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது.

டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 255 ரன்கள் என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியின் வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் ரிஷாப் பன்ட் அவுட் ஆக, மறுமுனையில் இந்திய கேப்டன் விராட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றியின் பாதையில் அழைத்து சென்றனர். 32.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. வெற்றியின் ஹீரோவாக அவர் இருந்தார். அவர் 99 பந்துகளில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த இன்னிங்ஸில் விராட் 14 பவுண்டரிகளை அடித்தார். அவரது பேட்டிங் சராசரி விகிதம் 115.15 ஆக இருந்தது. இது விராட் கோலியின் தொடர்ச்சியான இரண்டாவது ஒருநாள் மற்றும் 43வது சதமாகும். 

தற்போது விராட் 239 ஒருநாள் போட்டிகளில் 11,520 ரன்கள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் எட்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 49 சதங்களை அடித்த சச்சின் பெயர் உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விராட் ஒன்பதாவது முறையாக ஒரு சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக 9 முறை 100 ரன்களைக் கடக்கும் முதல் பேட்ஸ்மேன் இவர் ஆவார். ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் சமன் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் 9 சதம் அடித்துள்ளார்.

விராட் கோலியும் குறுகிய இன்னிங்ஸில் 43 ஒருநாள் சதம் அடித்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். இது விராட்டின் 239 வது போட்டி. விராட் கோலியும் மேற்கிந்திய தீவுகளில் அதிக ஒருநாள் சதம் அடித்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். வெஸ்ட் விண்டீஸில் நான்காவது முறையாக சதம் அடித்தார். முன்னதாக இந்த பதிவு மத்தேயு ஹேடன், ஹாஷிம் அம்லா மற்றும் ஜோ ரூட் பெயர்களில் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் மேற்கிந்தியத் தீவுகளில் மூன்று முறை சதம் அடித்திருக்கிறார்கள்.

மேற்கிந்திய தீவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது கேப்டன் விராத் கோலிக்கு வழங்கப்பட்டது.