'வீடியோ கேம் ஆட்டம்' சூர்யகுமார் குறித்து விராட் கோலி... மிரண்டு போன வில்லியம்சன்!

அதிரடியாக விளையாடி இன்றைய போட்டியில் சதமடித்த சூர்யகுமார் குறித்து விராட் கோலி, வில்லியம்சன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 20, 2022, 08:20 PM IST
  • நியூசிலாந்து அணியை இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
  • சூர்யகுமார் சதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
  • சூர்யகுமார் இந்த ஆண்டில் 1151 ரன்களை டி20 அரங்கில் குவித்துள்ளார்.
'வீடியோ கேம் ஆட்டம்' சூர்யகுமார் குறித்து விராட் கோலி... மிரண்டு போன வில்லியம்சன்! title=

தற்போதைய டி20 கிரிக்கெட்டில் எல்லா அணிகளுக்கும் சிம்மசொப்பமனாக திகழ்பவர் என்றால் அது சூர்யகுமார் யாதவ்தான். நடப்பாண்டில் மட்டும் அவர் 1100+ ரன்களை சர்வதேச டி20 போட்டிகளில் குவித்துள்ளார். 

சென்னை 600028 திரைப்படத்தின் முதல் பாகத்தில், கடற்கரையில் சிறுவர்கள் அணியுடன் கிரிக்கெட் விளையாடும்போது, சத்யா நிதின் கூறுவதுபோல்,"அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா" என்ற மனநிலையில்தான் உலகத்தர பந்துவீச்சாளர்கள் உள்ளனர். 

நடந்த முடிந்த டி20 உலகக்கோப்பையாக இருக்கட்டும், இன்று நடைபெற்ற நியூசிலாந்து உடனான போட்டியாக இருக்கட்டும் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்து வருகிறார். பவர்ஹிட்டர்கள் அனைவரும் செட்டில் ஆக சில பந்துகள் காத்திருக்கும் நிலையில், சூர்யகுமாரோ முதல் பந்தில் இருந்து பட்டாசுதான்.

மேலும் படிக்க | ஒரு சதம்...பல சாதனை பலே சூர்யகுமார் யாதவ்; ரோகித் இடத்திலும் சிம்மாசனம் போட்டாச்சு!

எந்த இடத்தில் யார் நிற்கிறார்கள், பந்து எங்கு விழப்போகிறது என அனைத்தையும் நொடியில் தனது நுண்ணறிவால் நுகர்ந்து, நூறை நோக்கி செல்வது மட்டும் சூர்யகுமார் யாதவின் நோக்கமாக உள்ளது. இன்றைய போட்டியில் அரைசதம் அடிக்க 32 பந்துகளை எடுத்துக்கொண்ட அவர், அடுத்த 17 பந்துகளில் சதத்தை பதிவு செய்து மிரட்டினார். 

மொத்தம் அவர் 52 பந்துகளில் 111 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்டநாயகன் விருதையும் அள்ளிச்சென்றார். டி20 போட்டிகளில் இந்தாண்டின் அதிக ரன்களை குவித்த வீரராகவும், ஒரு ஆண்டில் டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றுள்ளார். 

தொடர்ந்து, ஓர் ஆண்டில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 1151 (நடப்பாண்டு) ரன்களுடன் சூர்யகுமார் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதில், 1326 (2021) ரன்கள் எடுத்து முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். இன்னும் 175 ரன்கள் சூர்யகுமாருக்கு தேவை. நியூசிலாந்துடன் ஒரு போட்டி, வங்கதேசத்துடன் டி20 தொடர் என போட்டிகள் வரிசையாக இருப்பதால், சூர்யகுமார் அதை முறியடித்துவிடுவார் என்றே கூறப்படுகிறது. 

இந்நிலையில், சூர்யகுமாரின் இந்த ஆட்டம் குறித்து விராட் கோலி ட்விட்டரில்,"தான் ஏன் இந்த உலகத்தில் சிறந்தவன் என அவர் காட்டிக்கொண்டிருக்கிறான். நான் போட்டியை நேரலையில் பார்க்கவில்லை, ஆனால் அவன் மீண்டும் ஒரு வீடியோ கேம் ஆட்டத்தைதான் விளையாடியிருப்பான் என்பதை உறுதியாக கூறுகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

போட்டி முடிந்த பின் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில்,"சூர்யகுமாரின் ஆட்டம் நிகரற்றது. இன்றைய ஆட்டம், நான் பார்த்ததில் அவரின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்று. அவர் விளையாடிய சில ஷாட்களை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை. அவை மிகச்சிறப்பாக இருந்தது. அதற்கு ஒப்பானது ஏதுமில்லை. சிலசமயம், சிறப்பான ஒரு இன்னிங்ஸ் அமைந்துவிடும், அதை தடுக்க முடியாது. உலகின் சிறந்த வீரர் சூர்யாதான்" என்றார். 

மேலும் படிக்க | IND vs NZ: சதமடித்து மிரட்டிய சூர்யகுமார்... நியூசிலாந்தை அப்படியே சுருட்டிய இந்தியா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News