முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு கொண்டு வந்தது சரியா? அல்லது தவறா? என தனது பார்வையை முன் வைக்கிறார் தமிழ்நாடு பசுமைத் தாயகம் அமைப்பை சேர்ந்த இர.அருள்.
உங்கள் பார்வைக்கு....!!
மருத்துவக் கல்வியில் முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை ஏற்கலாமா என்பதற்கான 'அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டம்' இன்று நடைபெறுகிறது.
இது மீண்டும் ஒரு சமூகநீதி விவாதத்தை கிளப்பக் கூடும். இந்நிலையில், முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு நியாயமா, அநியாயமா, ஏற்கலாமா, ஏற்கக் கூடாதா - என்பது குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீட்டில் உள்ள அநீதி என்ன?
இந்திய அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டு முறையில் - முன்னேறிய சாதியினரும் (Forward Caste) பட்டியலின சாதியினரும் (SC/ST) காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மட்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.
1. மக்கள் தொகையில் 22.5% உள்ள SC/ST பிரிவினருக்கு 22.5% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது (பொருளாதார உச்சவரம்பு எதுவும் இல்லை).
2. மக்கள் தொகையில் 10% அளவுக்கு கீழாக உள்ள முற்பட்ட பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது (பொருளாதார உச்சவரம்பு: ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம்).
3. மக்கள் தொகையில் 52% உள்ள OBC மக்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது (பொருளாதார உச்சவரம்பு: ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம்).
அதாவது, மக்கள் தொகையில் சுமார் 10% அளவுக்கு கீழாக இருக்கும் முன்னேறிய வகுப்பினருக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு மேலாக 10% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
அதே போன்று 22.5% அளவு இருக்கும் பட்டியலின வகுப்பினருக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக 22.5% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.
ஆனால், மக்கள் தொகையில் 52% இருக்கக் கூடிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மிகக் குறைவாக 27% இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இது என்ன விதமான சமூகநீதி?
FC/SC/ST பிரிவு மக்கள் அவர்களின் மக்கள் தொகைக்கும் கூடுதலான இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், OBC வகுப்பினருக்கு மட்டும் அவர்களுக்கு உரிமையான இடதுக்கீட்டை கூடபெறுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த அநீதியை எவ்வாறு ஏற்க முடியும்?
'இந்திய மக்களில் பட்டியலினத்தவரும், முன்னேறிய பிரிவினரும் மட்டுமே அனைத்து உரிமைகளும் உள்ளவர்கள். ஆனால், பிற்படுத்தப்பட மக்கள் மட்டும் இரண்டாம் தர குடிமக்கள்; பிற்படுத்தப்பட மக்கள் சம உரிமை இல்லாதவர்கள்' என்று பாஜகவும், காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிலைநாட்டுவதை நாம் அவர்களின் பாதங்களில் சரணடைந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
உண்மையான சமூகநீதி என்பது என்ன?
முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு கூடாது என்பது நமது கருத்து அல்ல. மாறாக அனைத்து சமூகத்தவருக்கும் விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
1987 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் நடத்திய 'ஒருவார கால சாலைமறியல்' போராட்டத்தின் முதல் கோரிக்கையே 'அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும்' என்பதுதான். எனவே, நாம் எதிர்ப்பது முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அல்ல. மாறாக, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை தான் எதிர்க்கிறோம்.
இப்போதும் கூட, தமிழ்நாட்டில் உள்ள 'பிராமணர்கள் உள்ளிட்ட' எந்தவொரு சமூகமும் தனது மக்கள் தொகை அளவுக்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டு போராட முன்வந்தால் - அந்தப் போராட்டத்தில் பாமக முன்னணியில் நிற்கும்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 7.1.2019-ல் வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் கருத்தை தெரிவித்தார்கள்
"எந்தப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதை பா.ம.க எதிர்க்கவில்லை. மாறாக, அதற்காக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளைத் தான் எதிர்க்கிறது.
இந்தியாவில் காலங்காலமாக சமூகப் படிநிலையின் அடிப்படையில் தான் மக்களுக்கு கொடுமைகளும், இழிவும் இழைக்கப்பட்டு வந்ததே தவிர, பொருளாதார அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு செய்யப்படும் பரிகாரம் தான் இட ஒதுக்கீடு. இது அப்பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, உரிமை ஆகும்.
உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்" - இதுவே பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாட்டில் BC/MBC பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகை அளவுக்கும் மிகக்கீழாக 50% இடஒதுக்கீட்டை (MBC 20% + BC 30%) அளித்துவிட்டு, முற்பட்டப்பிரிவினருக்கு மட்டும் அவர்களின் மக்கள் தொகைக்கும் கூடுதலாக 10% இடஒதுக்கீடு அளிப்பது அநீதி. இந்த அநீதி முறியடிக்கப்பட வேண்டும்.
இதற்கு மாற்றாக, அனைத்து சாதியினருக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 100% விகிதாச்சார இடஒதுக்கீடு என்பதே சரியான தீர்வு. (100% விகிதாச்சார இடஒதுக்கீட்டில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஏழைகளில் தகுதியானவர்கள் கிடைக்காத நிலையில், அதே சாதியில் மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம்).
அந்த வகையில் - பிராமணர், உயர்சாதிகளுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
(குறிப்பு: தமிழ்நாட்டில் முற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 10% அளவுக்கு கூடுதலாக இருக்குமானால், அவர்களுக்கு 10% அளவுக்கு மேலாகவும் இடஒதுக்கீடு அளிக்கலாம். ஆனால், அதனை BC/MBC பிரிவினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு அளிக்கும் போது தான் அளிக்க வேண்டும்.)
தந்தை பெரியார்
“எப்போது ஒருவனுக்கு, அவனுக்கு என்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு என்பதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு - அவன் தனது மதம், சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்கமுடியும்?
வகுப்பையும், மதத்தையும், சாதியையும் ஒருபுறம் காப்பாற்றிக் கொண்டு - மற்றொரு புறத்தில் சாதி, மத, வகுப்புப் பிரதிநிதித்துவம் கேட்பதை அயோக்கியத்தனம் என்று சொன்னால், அப்படிச் சொல்வது ஆயிரம் மடங்கு அயோக்கியத்தனமும், இரண்டாயிரம் மடங்கு இழித்தன்மையும், வஞ்சகத் தன்மையும் துரோகத் தன்மையும் ஆகாதா என்பதோடு இது தங்கள் வயிற்றுப் பிழைப்புக்கும், வாழ்வுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கீழ்மக்கள் தன்மையல்லவா அது?
ஏதாவது ஒரு மனிதன், தன்னுடைய மதம் சிறுபான்மையானது என்றும், தன்னுடைய சாதி வலுவிழந்த சாதி என்றும், தன்னுடைய வகுப்பு தாழ்த்தப்பட்டதென்றும் சொல்லி, அதன் காரணமாக ஆட்சியில் தனக்குள்ள பங்கு இன்னது என்பதைத் தெளிவாகச் சொல்லி, 'என்னை நீ அடக்கியாள முடியாதபடி செய்துவிடு' என்று சொல்வதில் என்ன தப்பு?
தன்னுடைய பங்கைத் தனக்குக் கொடு என்று என்று கேட்டவுடன் கொடுக்க மறுத்த குடும்பங்கள் எல்லாம் நாசமுற்றே இருக்கின்றன. ஆகவே எந்த மத, சாதி, வகுப்பாருடைய பங்கையாலும் மறுத்து ஏமாற்றப் பார்த்தால் கண்டிப்பாக அந்த நாடு கேடுறுவது திண்ணம்."
- தந்தை பெரியார்
(குடிஅரசு தலையங்கம் 08.11.1931)
இவ்வாறு இர. அருள் கூறியுள்ளார்.