நகை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானில் சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்கள் சுட்டதில் உயிரிழந்தார். மேலும் 4 தமிழக போலீசார் காயமடைந்தனர்.
அக்குழுவில் இடம்பெற்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டு கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட தனி மேடையில் பெரியபாண்டியன் உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். போலீசார் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.
எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெரியபாண்டியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பெரியபாண்டியனின் உடல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான தேவர்குளம் சாலைப்புதூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெரியபாண்டியனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பின்னர் நள்ளிரவில் 1.30 மணி அளவில் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெரியபாண்டியனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.