தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 67,720 வாக்குச்சாவடி மையங்களில் 7780 மையங்கள் பதற்றமானவை என தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழகத்தில் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பறக்கும் படைகளால் இதுவரை 127 கோடியே 66 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகு 62 கோடியே 24 லட்ச ரூபாய் பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
cVIGIL செயலி மூலம் இதுவரை 2,085 புகார்கள் பெறப்பட்டு, அதில் 899 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 50 புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், மற்ற புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா குறிப்பிட்டார்.
வாக்குச்சாவடியை கைப்பற்றுவது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாக எழுந்த புகார் குறித்து, அன்புமணி ராமதாஸ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், வருமான வரித்துறை சோதனை எந்த உள்நோக்கத்தோடும் நடத்தப்படுவது இல்லை எனவும் குறிப்பிட்டார்.