நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனை நகைச்சுவை ஞானி என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., "நண்பர் கிரேசி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விசயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லெளகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர். “கிரேசி” என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் “நகைச்சுவை ஞானி”.
அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்றவைகயில் ஜனரஞ்சகமாக தன்னை காட்டிக்கொண்டார் என்பதுதான் உண்மை.
— Kamal Haasan (@ikamalhaasan) June 10, 2019
பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர். அந்த நல்ல நட்பின் அடையாளமாக இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம். நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன?
மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம், அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது , போதாது. இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.