சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் தியேட்டர்களில் திரையிடப்படாது....
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது இத்திரைப்படம். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் பிற அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதே நேரத்தில், மதுரையில் மினிப்பிரியா தியேட்டர் முன்பு அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின் போது ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், "சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கண்டிப்பாக இந்தப்படம் எந்த தியேட்டரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம். காட்சிகளை நீக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
மதுரையில் பிரபல தியேட்டரான சினிப்ரியா தியேட்டர் மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சர்கார் காட்சியை ரத்து செய்துள்ளோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் மற்ற தியேட்டரிலும் சர்கார் படத்தை ஓட விடமாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu: Members & workers of AIADMK protest outside Priya Enterplex in Madurai against #Sarkar film. VV Rajan Chellappa, AIADMK MLA says "We'll continue to protest outside theatres till controversial scenes & dialogues aren't removed. We appeal exhibitors not to show it." pic.twitter.com/wDql4pHY1v
— ANI (@ANI) November 8, 2018
இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறியதையடுத்து, தியேட்டர் நிர்வாகமும் இதனை உறுதி செய்துள்ளது. மதுரை சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்பிரியா ஆகிய மூன்று திரையிலும் சர்கார் பிற்பகல் 2 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அடுத்த காட்சி இருக்கும் எனவும் தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.