திமுக தலைவர் மு.க., ஸ்டாலினை சந்திக்க, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகிறார்.
பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, பாஜக கட்சியை தாக்கி வருகிறார். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்று திரட்டும் முனைப்பில் தற்போது செயலாற்றி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் முடிவில், இருகட்சிகளின் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக கட்சியின் தலைவர் முக ஸ்டாலினை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சந்திக்க உள்ளார்.
.சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று மாலை 7 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது பாஜகவுக்கு எதிராக கூட்டணியை உருவாக்குவது குறித்து மு.க.ஸ்டாலினிடம் சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்.
தென் இந்தியாவில் பாஜவின் வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இந்த சந்திப்பு இருக்கும் எனவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக இது அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.