சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை வேண்டும்: PMK

சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Last Updated : Jan 20, 2020, 12:58 PM IST
சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க  நடவடிக்கை வேண்டும்: PMK  title=

சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

இது குறித்து இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "நெடுஞ்சாலைகளில் பயணம் என்பது இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும்; இறப்பை நோக்கியதாக இருந்து விடக்கூடாது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் பறக்கும் வேகத்தையும், கண் முன்பே நடக்கும் விபத்துகளையும் பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விபத்துகளை விலைக்கு வாங்கும் போக்குக்கு முடிவு கட்டுவதே முதல் கடமையாக இருக்க வேண்டும்.

உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடு இந்தியா தான். இந்தியாவிலேயே அதிகளவில்  விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் பெரு நகரமும் சென்னை தான். இந்த சாதனைகள் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியளிக்காது; வேதனையையே  அளிக்கும். இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு காரணமோ, அதே அளவுக்கு  வாகன ஓட்டிகளும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. வழுக்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு சாலைகளும், மின்னலாக சீறும் அளவுக்கு அதிநவீன வாகனங்களும் பெருகி விட்ட நிலையில் அவற்றை நமது கட்டுப்பாட்டில் வைக்காமல், அவற்றுக்கு நாம் அடிமையானது தான் இதற்கு காரணமாகும்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கரை லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்றரை லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். உயிர்க்கொல்லி நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் ஆகும். விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, உயிரிழப்புகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. உதாரணமாக 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 லட்சத்து 64,910 விபத்துகள் நடந்தன. இவற்றில்   உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் 1,34,796 ஆகும். இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 47,913 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 65,562 விபத்துகள் நடந்துள்ளன. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை  உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 16,661 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இதை சாதாரணமான புள்ளிவிவரமாக கடந்து செல்ல முடியாது. சாலைகளில் நிகழும் விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு  வருகின்றன. விபத்துகளில் காயமடையும் நான்கரை லட்சம் பேரில் பெரும்பான்மையினர் வாழ்வாதாரத்தை ஈட்டும் திறனை இழக்கின்றனர். இவை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதவை. சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தான் இனிவரும் காலங்களில் இத்தகைய இழப்பை கட்டுப்படுத்த முடியும்.

சாலைவிபத்துகளைக் கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளால் முடியாதவை அல்ல. 1999-ஆம் ஆண்டு வரை இந்தியாவின் நான்கு திசைகளிலும் உள்ள பெருநகரங்களான புதுதில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகியவற்றை இணைக்க தரமான சாலைகள் இல்லை. ஆனால், 1999-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, மிகவும் தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டு 2011-ஆம் ஆண்டுக்குள் இந்நகரங்களை இணைக்கும் அளவுக்கு 5846 கி.மீ தொலைவுக்கு தங்க நாற்கர சாலைகள் 4 வழிகளுடன் உருவாக்கப் பட்டன. 2010-11 ஆம் ஆண்டில் 70,934 கி.மீ நீளத்திற்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டிருந்த நிலையில், அடுத்த 8 ஆண்டுகளில் அவை இரு மடங்காக, அதாவது 1,42,126 கிமீ நீளத்திற்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்த சாதனைகளுடன் ஒப்பிடும்போது சாலை விபத்துகளையும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்துவது பெரிய பணி அல்ல... சாத்தியமாகக் கூடிய பணி தான்.

விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான். இந்தியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் அதிவேக மகிழுந்துகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்ற வகையில் சாலைகளும் 4 வழிச்சாலைகளாகவும், 6 வழி, 8 வழிச்சாலைகளாகவும் விரிவடைந்து விட்டன. ஆனால், சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படாத நிலையில், சில வாகனங்கள் கண்மூடித்தனமான வேகத்தில் இயக்கப்படுவது தான் விபத்துகளுக்கு காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், நகரங்களுக்குள்ளும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும்  இருப்பதைப் போலவே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் வேக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட இடைவெளிகளில் வேகத்தை அளவிடும் காமிராக்களைப் பொறுத்தி, அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் அதிகாரிகள், அக்குறையை உடனடியாக சரி செய்கின்றனர். ஆனால், நமது நாட்டில் ‘இது விபத்துப் பகுதி’ என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழக்கத்தைக் கைவிட்டு, விபத்துப் பகுதிகளில் உள்ள குறைகளை சீரமைத்து, அதில் விபத்துகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இரு சக்கர ஊர்திகளில் சைலன்சரை அகற்றிவிட்டு பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அபாய சங்கு போன்று ஒலி எழுப்பிச் செல்வோரை பிடித்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்ய வேண்டும்.

முக்கியமாக ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறையை கடுமையாக்க வேண்டும். இந்தியாவில் சிறப்பாக  வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களால் கூட, வெளிநாடுகளுக்கு செல்லும் போது எளிதாக ஓட்டுனர் உரிமம் பெற முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் மிகவும் எளிதாக மகிழுந்து ஓட்டுனர் உரிமம் கிடைக்கிறது. இது தான் விபத்துக்கான முக்கியக் காரணமாகும். எனவே, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையானதாக மாற்றியமைக்க வேண்டும். மேற்கண்ட அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நான் கூறும் அறிவுரை அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்பது தான். அந்த நேரத்தில் தான் உறக்கம் காரணமாக அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்பதால், அதிகாலை வேளையில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்படி  கேட்டுக்கொள்கிறேன். 

 

Trending News