புதுச்சேரியில் மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதேப்போல் பீர் விலை ₹10 வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது!
அமைச்சரவை முடிவுப்படி கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு அரசாணை வெளியாவதால் புதுச்சேரியில் மதுபான விலை ₹50 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பீர் விலை ₹10 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
கடைகளில் உள்ள கையிருப்பு ஓரிரு நாட்கள் விற்றவுடன் புதிய சரக்குகள் கொள்முதலில் இருந்து இது நடைமுறைக்கு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
புதுச்சேரி அரசு கடும் நிதி சுமை கண்டு வரும் நிலையில், அரசு வருவாயை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் கலால் வரியை உயர்த்தியது. இதன் மூலம் புதுச்சேரியில் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் விற்கப்படும் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300க்கும் மேற்பட்ட மதுவகைகள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையை உயர்த்தி, வரி வருவாயை பெருக்க இம்மாத தொடக்கத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது இவ்விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது.
குறைந்த, சாதாரண ரக மதுபானங்களுக்கு குவார்ட்டருக்கு ரூ.2 முதல் ரூ.12.50 வரையிலும், நடுத்தர, உயர்தர மதுபானங்களுக்கு ரூ.10 முதல் ரூ.50 வரையிலும் விலை உயரும். இதேபோல கலால் வரி உயர்த்தப்பட்டதால் பீர் விலையும் உயரும். அதிகபட்சமாக ரூ.10 வரை பீர் விலை உயரும் என எதிர்பார்கப்படுகிறது.
எனினும் ஏற்கெனவே மதுபான விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள சரக்குகள் விலை உயர்த்தப்படவில்லை. இந்த விலை உயர்வு இனிமேல் புதிதாகக் கொள்முதல் செய்யப்படும் சரக்குகளில் இருந்து நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இதன் மூலம் புதுவை அரசுக்கு ரூ.117 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.