Chennai Weather Rain Latest News Updates: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ. 11) மதியம் 2.30 மணியளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இன்று (நவ. 12) காலை 8.30 மணியளவில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. வரும் நாள்களில் அவரை தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நவ.13ஆம் தேதியான நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை நிலவரம் என்ன?
அதிலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான – பலத்த மழை பொழிவிற்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கன – மிக கன மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | நிலம் வைத்திருப்பவரா? பட்டா மாற்றம் குறித்து தமிழக அரசு முக்கிய அப்டேட்
மேலும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று மாலை அவரது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மழை நிலவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில்,"இரவு போக போக மேகங்கள் உருவாகும். அதன்மூலம் விட்டுவிட்டு மழை பெய்யும். நாளை அதிகாலையில் இருந்து அலுவலகம் செல்லக்கூடிய நேரம் வகை பரவலாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது" என பதிவிட்டுள்ளார். இதன்மூலம், நாளை காலையும் சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சுயாதீன வானிலை ஆய்வாளர்களில் ஒருவர் ஹேமசந்திரன் கூறுகையில்,"தமிழகத்தில் நாளை விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் (KTCC) இன்று நள்ளிரவு முதலே அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை அதிகாலை நேரத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழையும், இன்னும் சில பகுதிகளில் மிக கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. KTCC மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் நாளை காலை 8.30 மணிக்குள் 20 செ.மீ., அளவில் அதீத கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் மழை நிலவரம்...
நாளை காலையில் தமிழ்நாட்டின் பிற கடலோர மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பொழிவை எதிர்பார்க்கலாம். தமிழ்நாடு முழுவதும் நாளை (நவ. 13) விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் பகலில் விட்டுவிட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கனமழையாகவும் இருக்கும்" என தெரிவித்தார்.
சென்னை பள்ளிகளுக்கு விடுமுறையா...?
சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக கனமழை பெய்தததன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. வானிலை ஆய்வாளர்கள் கணிப்பது போல் நள்ளிரவிலும், நாளை காலையிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்யும்பட்சத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது எனலாம். இருப்பினும் நாளை காலை சூழலை வைத்தே விடுமுறை அளிக்கப்படுமா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மேலும் தற்போதுள்ள காற்றழுத்த பகுதி வலுபெறாது எனவும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ