கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்க் என்ற இடத்தில் உருவாகும் பாலாறு நதி கர்நாடகாவில் 90 கிலோமீட்டரும், ஆந்திராவில் 32 கிலோமீட்டரும் கடந்து, தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் நுழைகிறது. அங்கிருந்து, 222 கிலோமீட்டர் பாய்ந்து கூவத்தூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்நிலையில் பாலாற்றில் தண்ணீரை சேமிக்கும் வகையில், லோக் தந்த்ரிக் ஜனதா தள கட்சியின் மாநில தலைவரும், சென்னை அடையாறைச் சேர்ந்த வழக்கறிஞருமான ராஜகோபால் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 5 லட்சம் விவசாயிகள் பாலாற்றின் தண்ணீரை நம்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவும், ஆந்திராவும் பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்டி தண்ணீரை சேமிப்பதாகவும், அவற்றை மீறி தமிழகத்திற்குள் வரும் நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்டப்படாததால், மழைக்காலங்களில் ஒரு லட்சம் கன அடி பாலாற்றுத் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதாகவும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வேலூர், கடலூர் மாவட்டங்களில் ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என்றும், 2021ஆம் ஆண்டு நவம்பர் 27ல் மனு அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மனுவை பரிசீலித்து, பாலாற்று நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலாற்றில் எவ்வளவு தண்ணீர் வருகிறது, எந்தெந்த இடங்களில் தடுப்பணை அமைக்க முடியும் என்ற விவரங்களை மனுவில் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தனர். மேலும், முறையாக எந்தவித ஆய்வும் செய்யாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தடுப்பணைகள் எங்கெங்கு கட்டப்பட வேண்டும் என்பதை அரசு தான் முடிவெடுக்க வேண்டுமென தெளிவுபடுத்திய நீதிபதிகள், முற்றிலும் விளம்பரத்திற்காக தொடரப்பட்ட வழக்கு என கூறி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடியும் செய்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | ஓராண்டு திமுக ஆட்சியில் 6 லாக் அப் மரணங்கள் - ஓர் அலசல்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR