சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை அமைப்பதற்கு எதிரான வழக்கு குறித்து திங்கட்கிழமை தீர்ப்பு!!
சேலம் - சென்னை இடையே பசுமை வழிச்சாலை ரூ.10,000 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இது தொடர்பாக, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் தொடங்கிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவஞானம் , பவானி சுப்பராயன் அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், முதற்கட்டமாக நிலத்தை கையகப்படுத்த நீதிபதிகள் தடை விதித்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை செய்து வந்தது. திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.
அனைத்து தரப்பிலும் இறுதி வாதங்கள் அன்று முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். மேலும், ஜனவரி 4ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த வழக்கில் நீதிபதிகள் வரும் திங்கள்கிழமை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பளிக்க உள்ளனர்.