சிலை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா-வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
பழனி உற்சவர் சிலை செய்தத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த கவிதா (52) காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது, ஏகாம்பரநாதர் கோயிலில் அமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி தங்கச்சிலைகள் செய்ததில் சுமார் 8.5 கிலோ தங்கம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கவிதா அவர்களை காவல்துறையினர் கடந்த ஜூலை 31-ஆம் நாள் கைது செய்தனர். கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டுச் செல்லப்பட்டார். அப்போது, கவிதாவுக்கு பார்வை குறைபாடு காரணமாக கண் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும், அது தொடர்பாக அவர் தொடர் சிகிச்சை பெறவேண்டியிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனவும் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையினை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் கவிதா தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று கவிதா-வுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 30 நாட்கள் திருச்சியில் தங்கியிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி 30 நாட்களும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.