கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்
கறுப்பு பணம், கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழிப்பது என்ற நோக்கத்துடன், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையிலும், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
மேலும் செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டு நிறைவை பா.ஜ.க. இன்று கொண்டாடுகிறது.
இதையொட்டி பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வரும் முயற்சியே பழைய ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம். பழைய ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு திடீரென எடுக்கப்பட்ட முடிவு இல்லை. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
இந்த திட்டத்தால் தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் பணம் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் 4 ஆயிரத்திலிருந்து 600 ஆக குறைந்துள்ளது.
சிறிய செலவுகளுக்கு ரொக்கப்பணத்தை பயன்படுத்தவேண்டும். பெரிய செலவுகளுக்கு ரொக்கமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த திட்டத்தின் பின் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பண குறைந்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கிக்கு வந்த அனைத்து பணமும் வெள்ளை அல்ல, அதில் கருப்பு பணமும் இருந்தது. அது குறித்து விசாரித்து பலர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
மன்மோகன் சிங், பிரதமராக இருந்த காலத்தில் சட்டப்பூர்வமான கொள்ளையும், கட்டமைக்கப்பட்ட திருட்டும் நடந்தது. அனைத்திலும் வெளிப்படையாக ஊழல் நடந்தது. அப்போது அவர் கண்டும் காணாமல் இருந்தார். மன்மோகன் சிங் ஒரு கருவியாக இயங்கி கொண்டிரு்தார் என்பதை மீடியாக்கள் கூறின.
இவ்வாறு அவர் கூறினார்.