தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் இன்றி சென்னையில் 331 பள்ளிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உரிய அங்கீகாரமின்றி 903 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றினை ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 30 பள்ளிகளும், கன்னியாகுமரியில் 18 சிபிஎஸ்இ பள்ளிகளும் அங்கீகாரமின்றி செயல்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், 331 பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த பள்ளிகளின் பெயர் பட்டியலையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலானவவை நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் ஆகும்.
இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை பெற்றோர் முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அப்பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொது தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், தொடர்ந்து தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் சண்முகசுந்தரம் எச்சரித்துள்ளார்.