சுஜித் மறைவு குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என முக ஸ்டாலின் ட்வீட்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Oct 29, 2019, 09:48 AM IST
சுஜித் மறைவு குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு: ஸ்டாலின்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழதையை மீட்க, அன்று முதல் இன்று அதிகாலை வரை இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 82 மணி நேர போராட்டத்திற்கு பின்பு, இன்று அதிகாலை 4 மணி அளவில் குழந்தை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் அனைவரும் வேதனைக்குள்ளாகியுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழாமல் இருக்கவேண்டும் என அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. நாடு முழுவதும் இறந்த சுஜித்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. அதன்பின்னர் குழந்தையின் உடற்கூராய்வுக்குப்பின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவனுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி" எனக்கூறி மறைந்த சுர்ஜித்துக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது, நான்கு நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தரச் சோகத்தைக் கொடுத்து போய்விட்டான். சுஜித் பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது? அவனது இழப்பு தனிப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பல்ல. நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு. சுஜித் நம் நினைவில் என்றும் நீங்க மாட்டான்! 

ஆழ்துளைக் கிணற்றுக்குள் இதுவரை எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கிறது. இனியொரு உயிர் பலியாகிவிடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி! 

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.