தி.மு.க. தலைவர் கருணாநிதியை நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு சந்தித்தார். அதன் பின்னர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்; நடிகர் கமல்ஹாசன், கருணாநிதியை சந்தித்து பேச வேண்டும் என்று என்னிடம் கேட்டார். வாருங்கள் என்று அழைத்தேன், வந்தார், சந்தித்து இருக்கிறார்.
புதிய கட்சியை தொடங்க இருக்கும் அவருக்கு நானும்,கருணாநிதியும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறோம். கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றபோதும் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டிக்கும் வகையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன்.
ஆனால் இதுவரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கவில்லை. எனவே நாங்களே முன் நின்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கிறோம்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு அழைப்பு விடுப்போம். அதுமட்டுமல்ல புதிய கட்சியை தொடங்க இருக்கும் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறோம்.
அவரும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். அரசியலுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம், அவர்கள் அதில் நிலைத்து நின்று மக்கள் பணியாற்ற வேண்டும்.