COVID-19 முழு அடைப்பிற்கு பின்னர் ஓம்னி பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் படி சமூக இடைவெளி காரணமாக ஓம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேருந்து கட்டணம் ஒரு கி.மீ.க்கு ரூ .1.60 முதல் ரூ .3.20 ஆக உயர்த்தப்பட உள்ளது என்று தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் (TOBOA) தெரிவித்துள்ளது.
TOBOA -ன் தலைவர் அப்சல் இதுகுறித்து கூறுகையில், சமூக இடைவெளியை உறுதி செய்வதற்காக பேருந்துகள் அவற்றின் உண்மையான திறனில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே செல்ல அனுமதிக்கப்படுகின்றன, எனவே கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.
அரை ஸ்லீப்பர் மற்றும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பேருந்துகளுக்கு பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும். ஏசி பேருந்துகளை இயக்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
தற்போது பயணிகளுக்கு சென்னை மற்றும் மதுரை இடையே 450 கி.மீ பயணம் செய்ய அரை ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ. 720 டிக்கெட் வசூளிக்கப்படுகிறது. பஸ் சேவைகள் மீண்டும் பணியை தொடங்கியதும் இந்த கட்டணம் ரூ.1440-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முழு அடைப்பின் போது பஸ் ஆபரேட்டர்கள் பெரும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறி இந்த கட்டண உயர்வை அமுல்படுத்த முன்வந்துள்ளனர். மேலும், செயல்பாட்டு செலவுகள் அதிகமாக இருப்பதால் இந்த கட்டணம் உயர்வு ஆச்சரியமல்ல என்றும் ஆபரேட்டர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஒவ்வொரு பயணத்திற்கும் கிருமிநாசினியைப் பயன்படுத்தி பேருந்துகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசாங்க வழிகாட்டுதல்கள் கூறியுள்ளதால் பராமரிப்பு செலவும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என பேருந்து ஆப்ரேட்டர்கள் தங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.