சென்னை: தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி இந்த செய்தியை தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தேர்வு.
— AIADMK (@AIADMKOfficial) May 10, 2021
முன்னதாக, வெள்ளியன்று தமிழக சட்டமன்றத்தின் (TN Assembly) எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. எனினும், அன்றைய கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போனது.
ALSO READ: தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார் கு.பிச்சாண்டி
இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. இன்று முதல் தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு (TN Lockdown) உள்ளதால், இந்த கூட்டத்திற்கான சிறப்பு அனுமதி தமிழக அரசிடமிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 3 மணிநேரமாக நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வகிக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (Edappadi K Palaniswami) இடையில் கடும் போட்டி நிலவியது என கூறப்படுகிறது. ஈ.பி.ஸ் தரப்பினர், கொங்கு மண்டலத்தில் அவர் பெற்ற வெற்றியையும், முதலமைச்சராக அவர் ஆற்றிய பணிகளையும் விளக்கி அவரே எதிர்க்கட்சித் தலவராக வேண்டும் என வாதிட்டனர். பன்னீர்செல்வம் தரப்பினர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் இருப்பதாலும், கட்சி தேர்தலில் தோல்வியுற்றதற்கு பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என கூறியும், பன்னீர்செல்வமே எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என தங்கள் வாதத்தை வைத்தனர். இறுதியில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் கொறடா ஆகிய பதிவகளுக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR