பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

Last Updated : Feb 2, 2020, 09:06 AM IST
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் பட்ஜெட்: எடப்பாடி பழனிசாமி title=

மத்திய அரசின் பட்ஜெட் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது.,

இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதித்துறை மந்திரியை பாராட்டுகிறேன். உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டை வரவேற்கிறேன்.

நாட்டில் நீர்ப்பற்றாக்குறை அதிகமாக நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீர்ப்பற்றாக்குறை நிலவும் அனைத்து மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டு, அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு தரிசாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச்சம்பவங்களைக் குறைப்பதிலும் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழகத்தில் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றை அமைக்க வேண்டும்.

ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மூலமாக செயலாக்கப்பட இருக்கும் கிசான் ரெயில் மற்றும் கிரிஷி உடான் திட்டங்கள் மூலம் தடையில்லா தேசிய குளிர்பதன முறை நிறுவப்பட இருப்பதையும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதையும் பாராட்டுகிறேன்.

ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து தொல்லியல் சார்ந்த இடங்களில் அருங்காட்சியகம் கொண்ட மேம்பாட்டு பணிகள் செய்வதாக அறிவித்துள்ளதை தமிழக மக்களின் சார்பாகவும் மத்திய அரசுக்கு நன்றி சொல்லும் அதே வேளையில், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் திறன்பேசி உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக இத்தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு வழிவகுக்கும். தொழில்நுட்ப ஜவுளி வகைகள் உற்பத்தியை தரம் உயர்த்திட 1,480 கோடி ரூபாய் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்துறையில் சிறந்து விளங்கும் சென்னை, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை சர்வதேசத் தரத்திற்கு இந்த நிதியுதவியால் உயர்த்த முடியும்.

புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Trending News