TN Assembly 2023: பரபரப்பான சூழலில் கூடுகிறது 'தமிழ்நாடு' சட்டப்பேரவை - இன்று கவர்னர் ரவி உரை

TN Assembly 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தாண்டின் முதல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆர். என். ரவி இன்று காலை 10 மணியளவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உரை நிகழ்த்த உள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 9, 2023, 06:28 AM IST
  • ஆளுநர் உரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்ப்பு.
  • திமுக அரசை எதிர்த்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்ய வாய்ப்பு.
  • இந்த கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.
TN Assembly 2023: பரபரப்பான சூழலில் கூடுகிறது 'தமிழ்நாடு' சட்டப்பேரவை - இன்று கவர்னர் ரவி உரை title=

TN Assembly Governor Speech 2023: ஆண்டுதோறும் தமிழ்நாடு சட்டபேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (ஜன. 9) கூடுகிறது. காலை 10 மணிக்கு கூடும் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துகிறார்.

சட்டபேரவைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமைச் செயலக வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு, அரசு தலைமைக் கொறடா கோவி செழியன், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். 

கவர்னர் உரையில் என்ன இருக்கும்?

பின்னர் கவர்னருக்கு பேண்டு வாத்தியத்துடன் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். அதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொள்வார். அதன் பின்னர் அவரை சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் சட்டசபை மண்டபத்திற்கு அழைத்து வருவார். அவர் வரும் வழியில் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும். ஆளுநர் உள்ளே வந்ததும் சபாநாயகர் இருக்கையில் அமர்வார். அவருக்கு அருகே சபாநாயகர் தனி இருக்கையில் உட்காருவார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 10 மணியளவில் ஆங்கிலத்தில் தனது உரையை வாசிப்பார். மக்கள் நலத்திட்டங்களின் நிலை, அவற்றை அரசு செயல்படுத்தும் விதம், அரசின் புதிய கொள்கைகள், புதிய திட்டங்கள் பற்றி அவர் உரை நிகழ்த்துவார். சுமார் ஒரு மணிநேரம் கவர்னர் உரை நிகழும். 

கவர்னர் உரைக்கு பின்...

அதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசிப்பார். காகிதம் இல்லாத சட்டசபை என்பதால், அவர்களின் உரைகள், சட்டசபையில் உள்ள தொடுதிரை கணினிகளில் திரையிடப்படும்.

ஆளுநர் மற்றும் சபாநாயகரின் உரை முழுவதும் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். உரையை சபாநாயகர் வாசித்து முடித்ததும் அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதைத் தொடர்ந்து கவர்னரை, சட்டசபையை விட்டு வெளியே சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் அழைத்து வந்து வழியனுப்பி வைப்பார்கள்.

பின்னர் சபாநாயகர் அலுவலகத்தில் அவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? அதில் என்னென்ன அலுவல்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

Governor RN Ravi

மேலும் படிக்க | பாஜகவை சுற்றி வட்டமடித்த பாலியல் புகார்கள்; மடைமாற்ற சர்ச்சை கருத்தை பேசினாரா ஆளுநர்?

ஸ்டாலின், இபிஎஸ் உரைகள்

சட்டப்பேரவை நாளை மறுதினம் (ஜன. 10) கூடியதும், ஈரோடு கிழக்கு தொகுதி, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெராவின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்படும். அவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் அன்று முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

பின்னர், ஜன. 11ஆம் தேதி சட்டசபையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் அழைக்கப்படுவார்கள். சட்டசபை கூட்டத் தொடரின் இறுதி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதல்-அமைச்சர் பதிலளிப்பார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவார்.

பரபரப்பு சூழலில் கவர்னர் உரை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருபவை சர்ச்சை கிளப்பிய வண்ணம் உள்ளன. அவரது பேச்சில் கூறப்படும் கருத்துகளால் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே ஆளும் கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் அவருக்கு கருத்து ரீதியாக பதிலளித்து வருகின்றன. 

அதோடு, சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா உள்ளிட்ட பல மசோதாக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன. அதுவும் கவர்னர் மீது பல அரசிகள் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சூழ்நிலையில் சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார் என்பதால் அரசியல் ரீதியான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் ஆளுநர் உரையை புறக்கணிப்பு நடக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த கூட்டத் தொடரின்போது ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்ப உள்ளன. சட்டம் ஒழுங்கு, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, பரந்தூர் விமான நிலையம், விவசாயிகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எதிர்கட்சிகள் இந்த கூட்டத் தொடரில் எழுப்ப தயாராக உள்ளதாக தெரிகிறது. அதற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். எனவே இந்த சட்டசபை கூட்டத் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | 'எடப்பாடியார் vs சின்னவர்' - ஜல்லிக்கட்டு விழாவில் மல்லுக்கட்டிய தொண்டர்கள்

அமைச்சர் உதயநிதி...

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அந்தஸ்துடன் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார். எனவே ஆளும் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினர் அவரை மேஜை தட்டி ஒலி எழுப்பி வரவேற்பார்கள். அவருக்கு சட்டசபையில் 10ஆவது இடம், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ரகுபதிக்கு இடையில் அளிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போதே சபாநாயகரின் குறிப்புரை வழங்கப்பட்டது. அதில் வேறு எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. எனவே இருக்கை மாற்றம் குறித்த வேண்டுகோளை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் எழுப்ப வாய்ப்புள்ளது.

கொரோனா தொற்று தமிழகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது என்றாலும், மக்கள் நல்வாழ்வுத் துறையின் அறிவுரையின்படி சட்டசபை கூட்டத்தின்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றப்படும். புதிய சட்ட மசோதாக்கள், அரசினர் தீர்மானம் போன்றவை அவையில் வைக்கப்பட வாய்ப்புள்ளது. கேள்வி நேரமும் இடம்பெறும்.

ஜார்ஜ் கோட்டையில் முதல் உரை

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நிகழ்த்தும் 2ஆவது உரை இதுவாகும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அவருக்கு பேண்டு வாத்தியத்தின் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பொதுவாக, முன்பு இதுபோன்ற நேரங்களில் கவர்னருக்கு பேண்டு வாத்தியத்தின் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அரசின் சார்பில் அளிக்கப்பட்டதில்லை.

Governor RN Ravi

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபைக்குள் இன்று முதல் முறையாக உரை நிகழ்த்த வரும், கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அங்கும் பேண்டு வாத்தியத்தின் கூடிய போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Alisha Abdullah Attacks: அலிஷா அப்துல்லா மூலம் காயத்திரி ரகுராமை அட்டாக் செய்யும் தமிழக பாஜக!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News