"தமிழக மீனவர்களின் படகுகளைப் பறிக்கும் இலங்கை அரசின் அராஜகத்தைத் தடுத்து சேதமான படகுகளுக்குரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...
"தமிழக மீனவர்கள் கடந்த 03.08.2018 முதல், தங்களின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடத்திய காலவரையறையற்ற போராட்டத்தை உதாசீனப்படுத்திய அ.தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஷம் போல் ஏறும் டீசல் விலை உயர்வால், விசைப்படகு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது படகுகளை இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்தும், சேதப்படுத்தியும் வருகிறது. பழுதான படகுகளை சீரமைக்கவும் அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்வதில்லை.
மூன்று இந்தியப் படகுகளை இலங்கை அரசு நாட்டுடைமையாக்கிய பிறகும் மத்திய அரசோ, மாநில அரசோ அதைக் கண்டுகொள்ளாமல் மீனவர்களின் நலனில் அக்கறை காட்டாமல் இருப்பது கவலையளிக்கிறது. கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் அச்சுறுத்தலையும், அதனால் உயிருக்கு பேராபத்தையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து செத்து மடியும் சூழ்நிலையில் சிக்கி அவதிப்படுகிறார்கள். ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் திரு ஜெயக்குமாரோ அல்லது முதலமைச்சரோ மீனவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.
நீண்ட நாட்களாகப் போராடிய மீனவர்கள் தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், அவர்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 25 ஆம் தேதியிலிருந்து மீண்டும் காலவரையறையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆகவே தமிழக மீனவர்களுடன் அ.தி.மு.க அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, உற்பத்தி விலைக்கே டீசல் வழங்குவது உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உறுதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய பா.ஜ.க. அரசுடன் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க அரசு, பிரதமருக்கு உரிய வகையில் அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்களின் படகுகளைப் பறிக்கும் இலங்கை அரசின் அராஜகச் செயலைத் தடுத்து நிறுத்தவும், சேதப்படுத்திய படகுகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையினைப் பெறவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்!