மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகள் உணவுக்காக மலையில் இருந்து கீழ் இறங்கும் போது, அசுர வேகத்தில் பாயும் ரயில், தந்திரமாக வெட்டப்பட்ட அகண்ட பள்ளம், மின்சார வேலி, மறைத்து வைக்கப்படும் அவுட்டுக்காய் போன்ற கீழ்மைகளையே சந்திக்கின்றன. உணவுச் சங்கிலி சுழற்சியில் யானைகள் இல்லாத காட்டை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கிறார்கள் சூழலியலாளர்கள். ஒவ்வொரு முறையும் மனிதர்களால் யானைகள் பலியாகிக் கொண்டே இருக்கின்றன.
மேலும் படிக்க | காட்டின் ‘பெரியவருக்கு’ உரிய மரியாதையைக் கொடுங்கள்.!
பல லட்ச ரூபாய் கடன் வாங்கி யானை, பன்றி உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாலான விவசாயிகள் வேலியில் மின்சாரம் வைப்பது வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக, மின்சார வேலியில் 9-ல் இருந்து 12 வாட்ஸ் மின்சாரத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். குறைந்த அழுத்த மின்சார வேலிகளை வனவிலங்குகள் தொடும்போது மின்சார அதிர்வை மட்டுமே உணரமுடியும். அதனால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை.
மின்சாரம் இருக்கிற பயத்தால் மீண்டும் அவை வேலிகளுக்கு அருகில் வருவதில்லை. ஆனால், சிலர் பயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டவிரோதமாக உயரழுத்த மின்சாரத்தை வேலிகளில் பயன்படுத்துகிறார்கள். அப்படியான இடங்களில்தான் யானைகள் சிக்கி உயிரிழந்து விடுகின்றன. கடந்த 2018ம் ஆண்டில் இருந்து 2021ம் ஆண்டு வரை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த யானைகள் மட்டும் 45. அதே ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 222 யானைகள் பலியாகி இருகின்றன!. இதுமட்டுமல்லாமல், விஷம் வைத்து 11 யானைகளும், வேட்டையாடி 29 யானைகளும் இந்த நான்கு ஆண்டுகளில் கொல்லப்பட்டுள்ளன.
மின்வேலியில் சிக்கிப் பலியாகும் யானைகளால் நம் வெறுப்பு முழுக்க விவசாயிகளின் தரப்புக்கு சென்றுவிடுகிறது. பொதுவாக, பலியாக்கப்படும் யானைகளுக்காக விவசாயிகளுமே குற்ற உணர்ச்சியில் இருந்தாலும், பொருளாதாரமும், சூழலும் அவர்கள் இந்த மின்வேலியில் மின்சாரத்தை வைக்க வேண்டியிருக்கிறது.
அவர்களது இந்த தரப்பையும், யானைகள் தரப்பையும் சேர்த்து தமிழக வனத்துறை ஓர் உரையாடலுக்கு வந்து, அதன் வழியாக தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனையிது. அதைவிடுத்து, மனிதர்கள் Vs யானைகள் என குறுகிய பார்வை பார்ப்பதன் மூலம் ஏதோவொரு தரப்பின் பக்கம் நிற்பது அறமல்ல. காடுகள் அழிப்பு, யானை வழித்தடம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இதில் அடங்கியிருப்பதால் தமிழக அரசு இதற்கு தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்சார வேலி பிரச்சனை எப்போது தீரும் என எதிர்பார்த்துக் காண்டிருக்கும் நேரத்தில், உயிரிழப்புகள் மட்டும் நின்றபாடில்லை. சேலத்தில் தற்போது மீண்டும் ஓர் ஆண் யானை இறந்திருக்கிறது. மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே ஆலமரத்துபட்டி கிராமத்தில் உள்ள கூழ் கரடுதோட்டம் வனப்பகுதியை ஓட்டியுள்ளது. இங்கு விவசாயி புஷ்பநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் வன விலங்குகள் புகுந்து சேதம் விளைவிப்பதை தடுக்க நிலத்தைச் சுற்றி கம்பி கட்டி, அதில் சட்ட விரோதமாக மின்சாரத்தைப் பாய்ச்சியுள்ளார்.
மேலும் படிக்க | காட்டுத்தீ...வெயில்...மிருகங்களின் தாகம்...! வனத்துறை சந்திக்கும் சவால்கள்
இன்று காலை சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட வடபருகூர் வனப்பகுதியில் இருந்து வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காகச் சென்று மின்சார கம்பியை மிதித்துள்ளது. சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கிறது. அப்பட்டமான கொலை. வேறு என்ன சொல்ல முடியும். தகவல் அறிந்து மேட்டூர் வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட விரோதமாக விவசாய நிலத்தில் கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சிய விவசாயி புஷ்பநாதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடவடிக்கைகள், இழப்பீடுகள், புலம்பல்களைக் கடந்து காடுகளுக்காகவும், வனவிலங்குகளுக்காவும் நாம் பேச வேண்டிய காலத்தில் இருக்கிறோம். சொல்லப்போனால், தற்போது அது கட்டாயமும்கூட!.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ