புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான டெல்லி உயர் நீதிமன்றத்தின் இன்று விசாரணை நடைபெற்றது. இரு தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி, அதன் பின்னர் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுரேஷ் குமார் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அதன்பின்னர் 15 நாள் சிபிஐ காவல் முடிந்து மீண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுத்து ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி இறுதி தீர்ப்பு வழங்காமல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி நீதிமன்ற காவல் முடிந்ததால், மீண்டும் அவர் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்றும் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தற்போது ப.சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார். வரும் அடுத்த மாதம் 3 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.