ஜல்லிக்கட்டு பரபரப்பில் நிதானம் தேவை: எச்சரிக்கும் நிபுணர்கள்

Jallikattu: ஜனவரி 8, 2017 அன்று தொடங்கிய 15 நாள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினாவின் மணற்பரப்பில், மஞ்சு விரட்டு மீது தமிழக மக்களுக்கு உள்ள  உணர்வுப்பூர்வமான பற்றுதல் பற்றி உலகுக்கே எடுத்துக்காட்டியது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 20, 2023, 03:12 PM IST
  • ஒழுங்கான வழிமுறைகளோடும், செயல்முறைகளோடும் நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்.
  • உச்சநீதிமன்றம் மற்றொரு முறை இந்த வீர விளையாட்டிற்கு தடை விதித்தால், மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தாலும் இதை திரும்ப கொண்டுவர முடியாமல் போகலாம்.
  • ஆகையால், தமிழ் பாரம்பரியம் மிக்க இந்த வீர விளையாட்டை தக்க வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.
ஜல்லிக்கட்டு பரபரப்பில் நிதானம் தேவை: எச்சரிக்கும் நிபுணர்கள் title=

சென்னை: 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையும் அதை ஒட்டிய விழாக்களும் நடந்துமுடிந்தன. ஜல்லிக்கட்டு திருவிழாவும் வெகு விமரிசையாக நடந்துள்ளது. எனினும், ஜல்லிக்கட்டு எதிர்காலத்தில் எந்த வித தடைகளும், சிக்கல்களும், பிரச்சனைகளும் இல்லாமல் நடக்க சில ஒழுங்கான கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என கருதுகிறார்கள் நிபுணர்கள். 

ஜல்லிக்கட்டின் பாரம்பரியம், பெருமை மற்றும் புகழ் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில், குறிப்பாக மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தழைத்தோங்கியது. ஜனவரி 8, 2017 அன்று தொடங்கிய 15 நாள் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினாவின் மணற்பரப்பில், மஞ்சு விரட்டு மீது தமிழக மக்களுக்கு உள்ள  உணர்வுப்பூர்வமான பற்றுதல் பற்றி உலகுக்கே எடுத்துக்காட்டியது. 

முன்கதை என்ன?

2014 இல், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. மேலும் 2016 இல் தடையை முழுமையாக்கும் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிறந்தவுடன், பொங்கல் பண்டிகை ஜல்லிக்கட்டு இல்லாமல் நடக்கும் என்ற உண்மை மக்களுக்கு புரியத் தொடங்கியது. எந்த வித முன்னேற்பாடும் இல்லாமல், உணர்ச்சி பெருக்கால் மெரினாவில் கூடி, சில நூறு இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் செய்யத் தொடங்கினார்கள். இதில் சிறிது சிறிதாக இன்னும் பலர் சேர்ந்துகொள்ள, உலகப் புகழ் பெற்ற ‘மெரினா புரட்சி’ என்ற ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ தொடங்கியது. 

இது ஒரு இணை இல்லாத போராட்டமாக உருவெடுத்தது. இங்கு கூடும் மக்களின் கூட்டம் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஜனவரி 8 அன்று, இரண்டு ஆயிரக்கணக்கில் இருந்த கூட்டம் பன்மடங்கானது. விவேகாந்தர் நினைவகத்திற்கு எதிரே உள்ள போராட்டத் தளத்தில், அந்த போராட்ட நாட்களில், எப்போது சென்று பார்த்தாலும், 30,000-க்கு மிகாமல் மக்கள் இருந்தனர். 

இந்த போராட்டத்திற்காக கூடிய கூட்டம், மிக நேர்த்தியாக நடந்துகொண்ட குணம்கொண்ட கூட்டமாக இருந்தது. தேவையற்ற வன்முறையோ, கூச்சல் குழப்பமோ அங்கு இல்லை. போராட்டக்காரர்கள் ஒரு வித்தியாசமான உறுதிப்பாட்டை காட்டினர். ஒரு சாதாரண பார்வையாளருக்கு இது ஒரு திருவிழாவை ஒத்திருந்தது. தெரு நாடகங்கள், பாடல்கள், நடன நாடகங்கள், பேச்சுகள் என கடற்கரை முழுவதும் பல குழுக்கள் பலவித நிகழ்ச்சிகளை நடத்தின. 

நல்லுண்ணம் படைத்த பலர் போராட்டக்காரர்களுக்கு உணவு மற்றும் பானங்களை தொடர்ந்து விநியோகம் செய்தனர். மேலும் போராட்டம் பல மாதங்களாக தொடரும் என்று தோன்றியது. கடலோரத்தில் நடந்த அமைதியான உள்ளிருப்புப் போராட்டம் தமிழர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியது. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட காளை விளையாட்டுகளை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நடவடிக்கைகளில் சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கத் தூண்டியது.

இந்த போராட்டத்தின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அரசு, அமைதியாகப் போராடியவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதால், போராட்டத்தின் கடைசி நாளில் ரத்தம் சிந்திய நிகழ்வுகளும் இருந்தன என்பது கசப்பான உண்மை. 

எனினும், இந்த போராட்டத்தின் பலன், சில அதீத ஆர்வமுள்ள மக்களால் தவறாக பயன்படுத்தப்படுவதை நாம் இந்நாட்களில் கண்டு வருகிறோம். 2022 ஆம் ஆண்டில், தமிழகம் முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட காளைகளை உள்ளடக்கிய சுமார் 600 ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடந்தன. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் தங்கள் சொந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தின. இவற்றில் காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என பலர் படுகாயம் அடைந்தனர். இந்த ஆண்டு இதில் புதிய சாதனை படைக்கப்பட்டிருக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு இப்படி சுமார் ஒரு டஜன் நிகழ்வுகள் நடந்துள்ளன.

மேலும் படிக்க | Happy Pongal 2023: சென்னையில் இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்கள்! திருத்தணி திருக்கடையூர் வீதியுலா 

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளில் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒன்பது மணி நேரத்தில் ஆயிரம் காளைகளை ஓட அழுத்தம் கொடுப்பது மிக அதிகம். ஒரு காளை வாடிவாசலை அடையும் முன், அது பல மணி நேரம் நின்றுகொண்டிருக்க வேண்டிய சூழல் உள்ளது. 

முழு வயிற்றைக் கொண்ட காளை மெதுவாக ஓடும், மாடு பிடி வீரர்கள் இதை எளிதில் பிடித்து விடுவார்கள் என்பதால், இந்த நேரத்தில் இவற்றுக்கு நன்கு உணவளிக்கப்படுவதில்லை அல்லது போதுமான அளவு தண்ணீர் கொடுக்கப்படுவதில்லை. காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடைக்கப்பட்டு, முடிந்தவரை விரைவாக தொடக்க வாயிலை நோக்கி தள்ளப்படுகின்றன. காளைகளின் எண்ணிக்கையை ஓரிரு நூறுகளுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவது விலங்குகள், அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உதவும்.

காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க ஒரு செயல்முறை வகுக்கப்பட வேண்டும். பெயருக்காக கமிட்டிகள் உள்ளன, மாநில அமைச்சர்கள் முதல் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர்கள் வரை உள்ள அரசியல்வாதிகள், தங்கள் தொகுதிகளில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சமாதானப்படுத்த விரும்புகிறார்கள். அனுபவத்திற்காக சிறுவர்கள் கூட இதில் பங்கேற்க அனுமதிக்கப்படுவது மற்றொரு கசப்பான உண்மை.

இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு ஒழுங்கான வழிமுறைகளோடும், செயல்முறைகளோடும் கட்டுப்பாடுகளோடும் நமது வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். பல முறைகேடுகள், உயிர் இழப்புகள், மோதல்கள், காளைகளின் தரமற்ற பராமரிப்பு ஆகியவை தொடர்ந்தால், மீண்டும் இந்த வீர விளையாட்டு சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளலாம். 

உச்சநீதிமன்றம் மற்றொரு முறை இந்த வீர விளையாட்டிற்கு தடை விதித்தால், மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டத்தாலும் இதை திரும்ப கொண்டுவர முடியாமல் போகலாம். ஆகையால், தமிழ் பாரம்பரியம் மிக்க இந்த வீர விளையாட்டை தக்க வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. 

மேலும் படிக்க | அவனியாபுரம்; பொறி பறக்கும் ஜல்லிக்கட்டு; சீறும் காளைகள் - அடக்கும் காளையர்கள்..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News