சமீப காலமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அவ்வப்போது மோதல்களும் வெடித்து வருகின்றன. இதையடுத்து, அண்ணாமலை ஜெயலலிதா குறித்து கூறிய விமர்சனம் பெரும் தீயாக பற்றி எறிந்து கொண்டிருக்கிறது.
அண்ணாமலை விமர்சனம்..
ஒரு பிரபல ஆங்கில நாளிதழுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், “தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்வர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால் தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார். இவரது இந்த கருத்து அ.தி.மு.கவினரிடையே பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில், இவருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து, அண்ணாமலை “இதுதான் என் அரசியல் பாதை..” என்ற பெயரில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க | வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை
அறிக்கை வெளியீடு:
எடப்பாடி பழனிசாமி அண்ணாமலைக்கு கண்டன தீர்மானம் கொண்டு வரப்போவதாக கூறியதை அடுத்து, அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
“இன்று அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக அறிகிறேன். அது மட்டும் அல்லாது நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவர்களைப் போல் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சகோதர சகோதரிகளுக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“ஊழல்தான் முக்கியப் பிரச்சினை”
அண்ணாமலையின் அறிக்கை தொடர்ச்சி, “தமிழகத்தில் ஊழல்தான் முக்கியப் பிரச்சினை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு. இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை மக்களுக்கான நலத் திட்டங்களை இயற்றுவதை விட்டுவிட்டு, அதன் மூலம் சிலர் மட்டும் எவ்வாறு பயனடையலாம் என்ற நோக்கத்திலேயே திட்டங்கள் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன” என்று அண்ணாமலையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அரசியலை வெறுக்கிறேன்..”
அறிக்கை தொடர்ச்சி.. “இத்தனை ஆண்டுகளில், அடித்தட்டு மக்கள் தங்கள் நிலையிலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசமும் தேர்தலின்போது பணமும் கொடுத்தால் போதும், அடுத்த ஐந்து ஆண்டுகளும் இந்த மக்களைச் சூறையாடலாம் என்ற எண்ணத்திலேயே ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள். ஏழை எளிய மக்களை எப்போதும் கையேந்தி நிற்கும் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகிறார்கள். இந்த வகையான அரசியலை நான் வெறுக்கிறேன்” என்று அண்ணாமலை தனது அறிக்கையில் காட்டமாக கூறியிருக்கிறார்.
செந்தில் பாலாஜி-அமலாக்கத்துறை ரெய்டு குறித்து அண்ணாமலை..
அண்ணாமலை தனது அறிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடக்கும் ரெய்டு குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அதில், “இன்றைய தினம், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், பதவியில் உள்ள அமைச்சர் ஒருவரின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது. அடிமட்டம் வரை ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
“அரசியல் பயணம் தொடரும்..”
அறிக்கை தொடர்ச்சி..“எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற போக்கினால், அரசியல் மேல் தமிழக மக்கள் மக்கள் நம்பிக்கை இழந்து இருந்தனர். நேர்மையான அரசியலை, நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து வெகுகாலம் காத்துக் கொண்டிருந்த நம் மக்களுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி, அரசியல் மேல் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ஊழலற்ற அரசு சாத்தியம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது, தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும்” என்று தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | செந்தில் பாலாஜி வீட்டுக்கு கூடுதல் துணை ராணுவப்படையினர் வருகை - கைது செய்ய வாய்ப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ