இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று சட்டசபை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவு செய்கிறேன்.
ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!" எனத் தெரிவித்தார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி சென்ற எடப்பாடி பழனிசாமி,விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். மேலும், விஷச்சாராயம் குடித்து பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விவரங்களை மருத்துவர்களிடம் இபிஎஸ் கேட்டறிந்தார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் வருகை தந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சுற்றிலும், விஷச்சாராயம் அருந்தி சுமார் 133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயம் குடித்து இவ்வளவு பேர் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து வேதனையும் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். உயிரிழந்தவர்கள் அனைவருமே மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளவர்கள். விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கூறினார்.
“கள்ளச்சாராயம் விற்பனை நடந்த பகுதிக்கு அருகே நீதிமன்றம், காவல் நிலையம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது. இவ்வுளவு அரசு அலுவலகங்கள் இருந்தும், கண்காணிப்பின்மை காரணமாக 35 பேர் இறந்துள்ளனர். இது வேதனையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நேற்று முதல் தற்போது வரை 200 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மதியம் வரை 3 பேர் பலி என செய்தி வந்த நிலையில், அடுத்தடுத்து கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை தந்துள்ளது. அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில் இவ்வுளவு மோசமாக கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இந்த கள்ளச்சாராய விற்பனைக்கு பின்னணியில் ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகார கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வுளவு துணிச்சலாக கள்ளச்சாராய விற்பனை நடக்க காரணம் என்ன?.
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் உதவி இருக்கிறார்கள். இதனால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 22 பேர் கள்ளச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தார்கள். அப்போதும் நான் கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்டுவதாக கூறினேன். இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
அப்போதே வழக்கு சிபிசிஐடி விசாரணை நடந்தபோதிலும், இன்று வரை எந்த கைதும் இல்லை, நடவடிக்கை இல்லை. இன்றும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர், 5 நாட்களுக்கு முன்னதாகவே கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அறிவுறுத்தினார். ஆனால் காவல்துறை அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. ஏழை-எளிய மக்கள் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி இருக்கின்றனர். இந்த விசயத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் கள்ளச்சாராய மரணத்தை வயிற்றுவலி என கூறி அரசுக்கு முட்டுக்கொடுக்கிறார்.
திமுக அரசு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காண்பித்த அக்கறையை கள்ளக்குறிச்சிக்கு காண்பித்து இருக்கலாம். மருத்துவமனையில் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தவில்லை. மருந்துகளை கையிருப்பு வைத்திருக்கவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மருத்துவரை கூட நியமனம் செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டு, மருத்துவமனை அமைத்து கொடுக்கப்பட்டது. Omeprazole என்ற மருந்துகள் கூட திமுக அரசு வாங்கி கையிருப்பு வைக்கவில்லை. விஷ சாராயத்தில் பெற்றோரை இழந்த குடும்பத்துக்கு, அதிமுக சார்பில் மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை உட்பட பிற உதவிகளும் செய்யப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச்செலவை அதிமுக ஏற்கிறது” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ