மகளிருக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் -அன்புமணி!

மகளிருக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு தெரிவத்துள்ளார்!

Last Updated : Mar 7, 2020, 01:15 PM IST
மகளிருக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் -அன்புமணி! title=

மகளிருக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்நாளில் உறுதியேற்போம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாசு தெரிவத்துள்ளார்!

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "வீட்டிற்கும், நாட்டிற்கும் ஒளியேற்றும் மகளிரைப் போற்றும் வகையில் உலக மகளிர் நாள்  கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக  பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.

உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். இவ்வளவு மரியாதைக்குரியவர்களாக இருக்கும் பெண்களை கல்வி, அரசியல், சமுதாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் உயர்த்த வேண்டியது அவசியமாகும்.

அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும்  பணி வழங்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து நிலைகளிலும்  பாலின நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். சமூக அடிப்படையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் முன்னேற்ற இடஒதுக்கீடு என்ற சமூக நீதி வழங்கப்படுவதைப் போல, பாலின அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மகளிரை முன்னேற்ற இட ஒதுக்கீடு என்ற பாலின நீதி வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.  வேலைவாய்ப்பில்  இட ஒதுக்கீடு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், அரசியலிலும், அதிகாரத்திலும் இட ஒதுக்கீடு என்பது மகளிருக்கு எட்டாக்கனியாகத் தான் உள்ளது. இந்த நிலையை மாற்றி வேலைவாய்ப்பிலும் தேசிய அளவில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அதற்கும் மேலாக சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் படுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இதற்காகவும், பிற துறைகளில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் இன்று முதல் கடுமையாக உழைக்க இந்நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending News