சிலை கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா-விற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது!
சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில், IG பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4 ஐம்பொன் சிலைகள், 22 கல்தூண்கள், பழங்கால கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன.
மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 100 ஆண்டுகள் பழமையானது. மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 100 கோடி வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைதொடர்ந்து, ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,. மேல்மருவத்தூர் அருகே மோகல்வாடி கிராமத்தில் உள்ள ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்த சோதனையில் பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிலை குவியல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தொழிலதிபர் ரன்வீர்ஷாவிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரனை மேற்கொள்ளு முடிவு செய்தனர். பின்னர் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் முறையாக வாங்கப்பட்டது என ரன்வீல் ஷா தரப்பில் இருந்து ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரன்வீர் ஷா வெளிநாடு செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது!