சென்னையில் தற்போது மீண்டும் தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த வகை பேருந்துகள் 2018ம் ஆண்டு வரை தமிழக அரசால் இயக்கப்பட்டு வந்தன. பிறகு சில காரணங்களால் இவை பயன்பாட்டில் இல்லை. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 58 புதிய தாழ்தள பேருந்துகள், 30 வழக்கமான பேருந்துகள், 12 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 100 புதிய பேருந்துகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.66.15 கோடி ஆகும். இந்த புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் போன்றவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க முடியும்.
போக்குவரத்துக்கு கழகம் சுற்றறிக்கை
புதிய தாழ்தளப் பேருந்துகளில் பயணிகளை ஏற்றி இறக்குவது தொடர்பாக மாநில போக்குவரத்து கழகம் சார்பில், நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், " மாநகர போக்குவரத்து கழகத்தில் 04.08.2024 அன்று முதல் புதிய தாழ்தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தி உள்ளது. இப்பேருந்துகள் பயணிகளின் வசதிக்கேற்ப தாழ்தள படிகட்டுகளுடன் கூடிய கீழ்கண்ட சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாலையில் இருந்து பேருந்திற்குள் ஏறும் உயரம் குறைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலையின் தன்மைக்கேற்ப உயரத்தை அதிகரிக்கவும், குறைக்கவும், செய்வதற்கான வசதி உள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக பின்வரும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முன் மற்றும் பின் படிகட்டு வழியாக எளிதில் ஏறி, இறங்குவதற்கு எளிதாக தாழ்தளம் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களில் தாழ்தள உயரத்தை இடதுபுறத்தில் சாய்த்து மிக எளிதாக ஏறி, இறங்கும்படி Kneeling வசதி செய்யப்பட்டுள்ளது. வீல் சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளம் பின்புற வாயிலில் பொருத்தப்பட்டுள்ளது. வீல் சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் சாய்தளத்தை தரைத்தளத்திலிருந்து விரித்து சாலையில் அல்லது நடைமேடையில் படிய வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பேருந்தினுள் வீல் சேருடன் அமர்ந்து பயணம் செய்ய வசதியாக தனி இடம் உள்ளது.
மேற்குறிப்பிட்ட வசதிகள் இப்பேருந்தில் உள்ளதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மாற்றுத்திறனாளிகள் வீல் சேர் உடன் பேருந்தில் பயணிக்க முற்படும்போது, வீல் சேர் ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி பேருந்தினுள் அவர்கள் ஏற உதவி செய்ய வேண்டும். மேலும் அவர்கள் பேருந்தினுள் பயணம் செய்யும் போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதியில் வீல் சேரை பேருந்தினுள் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் லாக் செய்ய நடத்துநர்கள் உதவவேண்டும். அவ்வாறு லாக் செய்யவில்லை என்றால், ஓட்டுநர் பேருந்தை இயக்கும் போதோ அல்லது sudden Brake போடும்போது வீல் சேர் அங்கும் இங்கும் நகர வாய்ப்புள்ளது, எனவே நடத்துநர்கள் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீல் சேரை பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கவனமுடன் லாக் செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளது.
சென்னையில் பயன்பாட்டில் உள்ள தாழ்தள பேருந்துகள் விவரம்:
தடம் எண் | புறப்படும் இடம் | சேரும் இடம் | பேருந்து எண்ணிக்கை |
19 | தியாகராய நகா் | திருப்போரூா் | 5 |
109 | பிராட்வே | கோவளம் | 5 |
104சி | கிளாம்பாக்கம் | கோயம்பேடு | 6 |
70வி | கோயம்பேடு | கிளாம்பாக்கம் | 7 |
102எக்ஸ் | பிராட்வே | திருப்போரூா் | 4 |
இ18 | பிராட்வே | கூடுவாஞ்சேரி | 4 |
40ஏ | பட்டாபிராம் | அண்ணாசதுக்கம் | 2 |
51ஏஎக்ஸ் | தியாகராய நகா் | கிளாம்பாக்கம் | 3 |
154 | தியாகராய நகா் | பூந்தமல்லி | 2 |
104சிஎக்ஸ் | கோயம்பேடு | கூடுவாஞ்சேரி | 3 |
515 | தாம்பரம் | மாமல்லபுரம் | 3 |
21ஜி | பிராட்வே | கிளாம்பாக்கம் | 2 |
70 | தாம்பரம் | ஆவடி | 2 |
242 | பிராட்வே | செங்குன்றம் | 3 |
டி29சி | பெரம்பூா் | திருவான்மியூா் | 2 |
101 | திருவொற்றியூா் | பூந்தமல்லி | 3 |
6டி | சுங்கச்சாவடி | திருவான்மியூா் | 2 |
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ