தனியார் பள்ளி வாகனங்களில் GPS மற்றும் CCTV கேமராக்களை பொறுத்த உத்தரவிடகோரிய வழக்கில், பள்ளி கல்வித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி வாகனங்களில் மாணவ மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை தடுக்கும் விதமாக, பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்கும் வகையிலும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் GPS கருவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கட்டாய கல்வி உரிமை சட்டம் என்பது கல்வி வழங்குவது மட்டும் இல்லை என்றும், ஆரோக்கியம், சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பான கட்டிடம், போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை ஆகியவையும் அடங்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், மனுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமீப காலமாக பள்ளி வாகன ஓட்டுநர், நடத்துனர்கள் பள்ளி மாணவ மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கா ஆளாக்கி வரும் செய்திகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றது. சமீபத்தில் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் சான்கர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பள்ளி வாகன நடத்துநர் 4 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது பள்ளி வாகனங்களில் GPS மற்றும் CCTV கேமராக்களை பொறுத்த வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.