கும்பகோணம் வலையப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், கும்பகோணம் வலையப்பட்டியில், மேலசத்திரம் மெயின் ரோட்டில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி சட்டவிரோதமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த கம்பெனியை மூடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தேன். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிளாஸ்டிக் கம்பெனி 2016-ல் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஆனால் பிளாஸ்டிக் கம்பெனி மீண்டும் செயல்பட்டு வருகிறது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்களின் செயலர் சுந்தரகோபால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை. விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு,வழக்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், கும்பகோணம் நகராட்சி ஆணையர், நகராட்சி கண்காணிப்பு பொறியாளர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மார்ச் 26ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்என உத்தரவிட்டனர்.