எதிர்வரும் திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக வேட்பாளருக்கு மதிமுக முழு ஆதரவு அளிக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ இதுதொடர்பான அறிவிப்பினை தெரிவித்தார். திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக-வின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் எனவும், 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல் தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்தது குறித்தி கேட்டதற்கு, ஸ்டாலின் அணுகுமுறை சரிதான் எனவும், மாநில கட்சிகள் எதுவும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கூட பெற முடியாத சூழலில் காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே தான் ராகுலை ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் இம்மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடி-க்கு எதிராக மதிமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை தேடும் பணியில் திமுக, அதிமுக ஈடுப்பட்டு வரும் நிலையில் திமுக-விற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.