திருச்சி: சிலை உடைப்பு சம்பவங்கள் தற்போது தமிழகத்தின் ஓர் அங்கமாகி விட்டதா என்ற கேள்வி எழும் அளவிற்கு சமீப காலங்களில் அடிக்கடி சிலை உடைப்பு, சிலை சேதம் ஆகியவை பற்றிய செய்திகளை நாம் கேட்டு வருகிறோம்.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலை அப்பகுதியில் புகழ்பெற்ற ஒரு அடையாளமாக உள்ளது. 1995-ம் ஆண்டு அப்போது அமைச்சர்களாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், நல்லுசாமி ஆகியோரால் இந்த சிலை திறந்து வைகப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ரின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அ.தி.மு.க. மற்றும் பிற அரசியல் கட்சி உறுப்பினர்கள் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கமாக நடக்கும் நிகழ்வாகும்.
இதற்கிடையில், நேற்று காலை திருச்சி காந்தி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.-ரின் அந்த சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உள்ள பகுதி உடைக்கப்பட்டு இருந்தது அங்குள்ள சிலரால் கவனிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான அ.தி.மு.க. (AIADMK) நிர்வாகிகளும், தொண்டர்களும் பொது மக்களும் கூடினர். இதனால், காந்தி மார்க்கெட் போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
எம்.ஜி.ஆர் (MGR) சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்ட மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இது குறித்து காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்துள்ள புகாரில், " எம்.ஜி.ஆர்.சிலையை உடைத்து சமூக விரோத செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
ALSO READ: தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மரக்கடையின் இந்த பகுதி மூன்று சாலைகள் பிரியும் இடமாகும். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன், காவல்துறையினர் இது குறித்த விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
" தேர்தல் (TN Elections) நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபோது, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் உருவச் சிலைகளும் துணியால் சுற்றப்பட்டு மூடப்பட்டன. தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, சிலைகளில் சுற்றப்பட்டிருந்த துணிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, மரக்கடை பகுதியில் உள்ள 26 ஆண்டுகள் பழமையான சிமென்ட்டால் ஆன எம்ஜிஆர் சிலையில் சுற்றப்பட்டிருந்த துணியை அகற்றியபோது, அந்தச் சிலையில் வலது கை மணிக்கட்டு பகுதியில் எதேச்சையாக உடைப்பு நேரிட்டது சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கண்டறியப்பட்டது. அந்தச் சிலை விஷமிகளால் சேதப்படுத்தப்படவில்லை.
அரசு, தனது வேலையைச் செய்யும்போது சிலை சேதமடைந்ததால், முதல்வரின் உத்தரவின்படி, சேதமடைந்த பகுதி உடனடியாகப் பொதுப்பணித் துறை மூலம் சீரமைக்கப்படவுள்ளது. தவிர, திருச்சி மாநகராட்சி உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகளுக்கும் பாதுகாப்பு இரும்புக் கூண்டுகள் விரைவில் அமைக்கப்படவுள்ளன. இனி புதிதாக மாவட்டத்தில் சிலை அமைக்க வேண்டுமெனில், தொடர்புடைய உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும்" என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு, எம்.ஜி.ஆர் சிலை உடைப்புக்கு பின்னால், யாருடைய சதி வேலையோ அல்லது தீய எண்ணமோ காரணமில்லை என்பது தெளிவாகியுள்ளது.
ALSO READ: சிறையில் வாடும் 7 பேரின் விடுதலை தொடர்பாக ஸ்டாலினிடம் வைகோ கோரிக்கை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR