அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை... இன்று மீண்டும் ஆஜர் - இதுவரை நடந்தது என்ன?

Minister Ponmudi ED Investigation: அமைச்சர் பொன்முடி வீட்டை சோதனை செய்த பின், அவரை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விடிய விடிய அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காலை சோதனை முதல் இரவு விசாரணை நிறைவு வரையிலான ஒட்டுமொத்த தகவல்களையும் இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 18, 2023, 06:39 AM IST
  • நேற்றிரவு 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணிவரை அலுவலகத்தில் விசாரணை.
  • பொன்முடி இன்று மாலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
  • விழுப்புரம், விக்கிரவாண்டியில் நடைபெற்ற சோதனைகளும் நிறைவுபெற்றது.
அமைச்சர் பொன்முடியிடம் விடிய விடிய விசாரணை... இன்று மீண்டும் ஆஜர் - இதுவரை நடந்தது என்ன? title=

Minister Ponmudi ED Investigation: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் விடிய விடிய அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அமைச்சர் பொன்முடியிடம் நேற்று (ஜூலை 17) இரவு 8.30 மணி முதல் இன்று (ஜூலை 18) அதிகாலை 3.00 மணி வரை நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.

7 பேர் கொண்ட குழு

தமிழ்நாடு அமைச்சரவை மற்றும் திமுகவின் முக்கிய பொறுப்பு வகிக்கக்கூடியவர், அமைச்சர் பொன்முடி.  தமிழ்நாடு அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராகவும், திமுகவில் துணைப் பொதுசெயலாளராகவும் பொன்முடி இருந்து வருகிறார்.

அவரது வீட்டில் நேற்று அதிகாலை 7 மணி முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் கோவில் அவன்யூ கார்னரில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏழு பேர் சோதனையில் ஈடுபட்டனர்.

9 இடங்களில் சோதனை
 
அமைச்சர் பொன்முடி வீடு மட்டுமல்லாது விழுப்புரம் சண்முகாபுரம் காலனியில் உள்ள அவரது மகன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி இல்லம், மகள் இல்லம் மற்றும் அவரது கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சைதாப்பேட்டையில் அமைச்சர் பொன்முடி அவரது இல்லத்தில் இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காலை 8 மணிக்கு மேல் அமைச்சர் பொன்முடி வீட்டை சுற்றிலும் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் குவியத் தொடங்கினர்.

மேலும் படிக்க | கைதா-விசாரணையா..? பொன்முடியை அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றது ஏன்..?

வங்கி ஊழியர்கள் அழைப்பு 

மத்திய துணை ராணுவப்படை உதவியுடன் சோதனை நடைபெற்றது. வீட்டை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பொன்முடியின் வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி சைதாப்பேட்டை இல்லத்துக்கு வந்த போதிலும் அவரை அதிகாரிகள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மதிய உணவை அமைச்சர் பொன்முடி வீட்டு முகவரிக்கு வரவழைத்து பர்கர் மற்றும்  உணவு வகைகளை உண்டனர். அதனைத் தொடர்ந்து இந்தியன் வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பின்னர் தங்க நகை மதிப்பீட்டாளர்களும் அமைச்சர் பொன்முடி  இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

ரூ. 70 லட்சம் ரொக்கம்
 
இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்க பணமும், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து கிட்டத்தட்ட  13 மணிநேரம் விசாரணைக்கு பின்னர் இரவு 7.55 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பொன்முடியை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விடிய விடிய விசாரணை

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் சட்டவிரோத பண முதலீடு தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், அமைச்சர் பொன்முடியிடம் மட்டுமே அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு சாஸ்திரி பவனில் விசாரணை நடத்தினர். இதனால் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக செம்மண் குவாரிகளுக்கு அனுமதியளித்து 28 கோடி ரூபாய் வருவாய் வரை அரசுக்கு வருமான இழப்பு செய்த வழக்கில் தான் விசாரணை நடத்தப்படுவதாக தெரியவருகிறது.

ரூ. 28 கோடி நஷ்டம்?

2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக பல்வேறு குவாரிகளுக்கு அனுமதி அளித்து, அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளப்பட்டு விற்பனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. 

இதன் மூலம் 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லாரிகள் மூலம் முறைகேடாக செம்மண் அள்ளி விற்பனை செய்ததில் 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து  நீதிமன்ற நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  இரவு முழுவதும் விடிய விடிய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சோதனைகள் நிறைவு

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. பொன்முடிக்கு சொந்தமான விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நள்ளிரவில் நிறைவு பெற்றது. 

இன்றும் விசாரணை

இந்நிலையில், இரவு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் பொன்முடியிடம் 7 மணி நேர விசாரணைக்கு பின் அதிகாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | ஆளுநர், அமலாக்கத்துறை... போட்டுத்தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன சொன்னார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News