புத்தாண்டை முன்னிட்டு தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி துவங்கியது!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 28.12.2017 முதல் 11.01.2018 முடிய 15 நாட்கள் கைத்தறி துணிகளின் தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி

Last Updated : Dec 28, 2017, 05:23 PM IST
புத்தாண்டை முன்னிட்டு தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி துவங்கியது! title=

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 28.12.2017 முதல் 11.01.2018 முடிய 15 நாட்கள் கைத்தறி துணிகளின் தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் இன்று (28.12.2017) காலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் பட்டு மற்றும் லினன் நூல் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட புதிய இரக சேலை, இலகுவான பட்டுச் சேலை மற்றும் புதிய இரக காஞ்சிபுரம் கோர்வை பட்டுச் சேலை, ஆகிய மூன்று புதிய ரக பட்டுச் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டு கைத்தறி இரகங்களின் விற்பனையை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கும், பன்னாட்டு அளவிலும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அமேசான் நிறுவனத்துடன் இணைந்த மின் வணிக விற்பனையையும் அவர் துவக்கி வைத்தார்.

பெரும்பாலான கிராம மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு குறைந்த முதலீட்டில், சிறந்த உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனை வாய்ப்புகள், இந்திய பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றுடன் கூடிய வாழ்வாதாரத்தை வேளாண்மையை அடுத்து கைத்தறி தொழில் வழங்குகிறது. தனித்துவமிக்க நிறம், நேர்த்தியான நெசவு, சிறந்த மற்றும் பாரம்பரியமிக்க வடிவமைப்பு ஆகியவற்றின் சங்கமமாக விளங்கும் இக்கண்காட்சியில் 58 காட்சியரங்குகள் அமைக்கப்பட்டு, அவற்றில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 180-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்டு, குஜராத், புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநில நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட, நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய மிகச்சிறந்த கைத்தறி துணி இரகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பதினைந்து நாட்கள் நடைபெறும் இந்த தேசிய கைத்தறி கண்காட்சியின் மூலம் ரூபாய் 2.00 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கைத்தறி ஜவுளி இரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் துணி இரகங்களுக்கு 30 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்கள் அனைவரும் இக்கண்காட்சிக்கு வருகை தந்து கண்கவர் கைத்தறி ஆடைகளை வாங்கி, பாரம்பரியமிக்க கைத்தறி தொழிலுக்கு கை கொடுக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் பங்களிப்பினை நல்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Trending News