நீட் தேர்வில் தமிழகத்திற்கு ஒராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினார்கள். நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை.
ஆனால், நீட் தேர்விலிருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு தயார். இதற்காக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்கும் என அவர் கூறினார்.