அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் பா.ஜனதா மிகப் பெரிய மாற்று சக்தியாக மாறும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பா. ஜனதா சார்பில் மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஊழலற்ற, வெளிப்படையான வளர்ச்சி மிக்க நிர்வாகம் தேவை என நினைக்கிறோம்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் பிரச்சனையை விட ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற அவசரப்படுவதில் தான் அதிக கவனம் செலுத்துகிறார். அதைவிட்டு விட்டு மக்கள் பிரச்சனைகளை பற்றி கொஞ்சம் விவாதிக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முருகன் என்பவரை மோடி நியமனம் செய்துள்ளார். அடுத்த 3 மாதங்களில் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பா. ஜனதா மாறும். கட்சியின் வளர்ச்சிக்காக நியமிக்கப்பட்ட முழுநேர ஊழியர்கள் 12,500 பேர் வருகிற 23-ம் தேதி முதல் பணியாற்ற உள்ளனர் என அவர் தெரிவித்தார்.