வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது யார்? தமிழக அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை

வடமாநில இளைஞர்களை சிலர் அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை வட இந்திய ஊடகங்கள் சில தமிழகத்தில் வட இந்தியர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளனர்.

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Mar 4, 2023, 06:51 PM IST
  • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
  • அப்போது பேசிய அவர், வடமாநில தொழிலாளர்கள் இங்கு பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது யார்? தமிழக அரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அண்ணாமலை title=

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் இந்தி பேசுவதால் அடித்துக் கொல்லப்படுவதாக ஒரு வதந்தி கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வருகிறது. பிகார் மாநில பாஜக இதனை மிகப்பெரிய ஆயுதமாக வைத்து தமிழகத்துக்கு எதிரான ஒரு பெரிய சதியை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன தான் நடக்கிறது? உண்மை என்ன? 

வடமாநில இளைஞர்களை சிலர் அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை வட இந்திய ஊடகங்கள் சில தமிழகத்தில் வட இந்தியர்கள் இந்தி பேசுவதால் தாக்கப்படுவதாகக் கூறி செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்தடுத்து பல வீடியோக்கள் இப்படி வெளியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுண்டெழுந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். 

தொழில் நகரமான திருப்பூரில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட சூழலில் அங்கு இந்தி பேசியதால் அவர்களில் சிலர் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பியுள்ளனர். ஒருசில கட்சியின் பொறுப்புகளில் உள்ள சிலரே இப்படி தேவையற்ற வதந்திகளை பரப்பியது தான் வேதனையின் உச்சம். இந்த வீடியோக்கள் உண்மை இல்லை எனவும், இது போலியாக ஜோடிக்கப்பட்டது எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வதந்தியால் தொழில் பாதிக்கப்படுவதாக புகார் வந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் , மாநகர காவல் துணை ஆணையர் அபிஷேக் குப்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள் . 

இதற்கு நடுவே தமிழக போலீசார் யார் இந்த வேண்டாத வேலையை செய்தது என்று விசாரணையில் இறங்கிய போது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. தமிழகத்தில் இந்தியில் பேசியதால் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக, சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய சிலரில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தித்தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் ஒருவர் என்பது தெரியவந்தது. அவர் மீது தமிழ்நாடு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அதோடு இன்று காலை சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வெளிமாநிலம் செல்லும் ரயில்களில் முண்டி அடித்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் ஏறிச் செல்லும் வீடியோ வெளியானது. தமிழகத்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இவர்கள் ரயில் ஏறி செல்வதாக தவறான தகவல் பரவியது. உடனே இந்த வீடியோவின் உண்மைத்தன்மை என்ன என ஆராய்ந்த போது, வடமாநில தொழிலாளர்கள் அவர்கள் ஊர்களில் விசேஷமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகைக்காக தான் ரயில் ஏறி சென்றது தெரியவந்தது. 

மேலும் படிக்க | பீகார் தொழிலாளர்கள் தாக்குதல்? - புரளிக்கு முற்றுப்புள்ளி... பட்டியல் போட்ட ஸ்டாலின்

சென்னை மட்டும் அல்ல கோவையிலும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களும் ஹோலி பண்டிகைக்காக தான் சொந்த ஊர்களுக்கு செல்வதாக கூறியுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வடமாநில தொழிலாளர்கள் இங்கு பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போல் சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்ட முகமது ரஷ்ஃபி என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். அதேபோல் இது போன்ற தவறான வீடியோ செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். 

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் இப்படி பெரிதானதை அடுத்து கிருஷ்ணகிரி எஸ்பி சரோஜ்குமார் தாகூர் வடமாநில தொழிலாளர்களுக்கு இந்தியில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் தமிழகத்தில் இருக்கும் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வதந்தி பரப்பினால் சிறை நிச்சயம் என்றும் கூறியுள்ளார். 

2024-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதற்காக தென்னிந்தியாவில் ஒரு தேசிய கூட்டணி உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது. சமீபத்தில் கூட மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராகலாம் என காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பேசி இருந்தார். இந்நிலையில் தேவையில்லாமல் வட மாநில தொழிலாளர்களை வைத்து தமிழகத்தின் பெயரை கெடுக்க சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு இதுபோன்ற கீழ்தரமாக அரசியல் செய்வது கடும் கண்டனத்துக்கு உரியது என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை: வானதி சீனிவாசன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News