நாட்டில் பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்டம் புகுத்தப்படுகின்றன -ப. சிதம்பரம்

பேசினாலே குற்றம் என்ற புதிய சட்ட நெறிகள் புகுத்தப்படுகிறது. பேசுவதே குற்றம் என்றாலும் 14 நாள் விசாரணை கைதியாக ஏன் அடைக்க வேண்டும் என்று முன்னால் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2020, 02:37 PM IST
நாட்டில் பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்டம் புகுத்தப்படுகின்றன -ப. சிதம்பரம் title=

புது டெல்லி: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைதான நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கோள்காட்டி, முன்னால் நிதியமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர், "நாட்டில் பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன" என கூறியுள்ளார்.

முன்னால் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? 

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும் பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?

எனக் கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார். 

 

முன்னதாக, நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா-விற்கு எதிராக வன்முறை தூண்டும் விதமாக பேசியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் விவகாரத்தில் அவர் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். 

இதனிடையே, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நெல்லை கண்ணன் பேசியதாக கூறி அவரை சிறையில் அடைக்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட நெல்லை கண்ணன் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நெல்லை கண்ணனுக்கு ஜனவரி 13 வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News