5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க - இராமதாசு!

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 24, 2020, 12:38 PM IST
5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்க - இராமதாசு!

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யக் கோரி 28-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில்., "தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்து முடித்து விட்டது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு, பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு உறுதியாக இருப்பது கல்விக்கு செய்யும் நன்மையல்ல... மாணவர்களுக்கு செய்யும் தீமையாகும்.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற யோசனை கடந்த 3 ஆண்டுகளாகவே முன்வைக்கப் பட்டு வரும் நிலையில், அதை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்ற பிரிவு சேர்க்கப்பட்டு  இருந்தது. கட்டாயத் தேர்ச்சி வழங்குவதால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக ஒரு தரப்பினர் புகார்கள் கூறியதை அடுத்து, அது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிப்பதை ரத்து செய்யலாம் என்று பரிந்துரைத்தது. அதன்படி  5 மற்றும் 8&ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய தீர்மானித்த மத்திய அரசு, அதற்கான சட்டத்தை கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது. எனினும், அச்சட்டத்தை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என மத்திய அரசே கூறியுள்ளது.

ஆனாலும், தமிழக அரசு தானாக முன்வந்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தவிருக்கிறது. மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காகத் தான் பொதுத் தேர்வு நடத்துவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. தமிழக அரசின் இந்த வாதத்தை ஏற்க முடியாது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி வழங்குதல் முதல்படி என்றால், கல்வித்தரத்தை உயர்த்துவது இரண்டாம் நிலையாகும். தமிழ்நாட்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களில் 99.25 விழுக்காட்டினர் ஐந்தாம் வகுப்பையும், 98.70 விழுக்காட்டினர் எட்டாம் வகுப்பையும், 96.70 விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பையும் நிறைவு செய்கின்றனர். இவ்வாறாக முதல்படியை தமிழகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படுவது தான். இதனால் இன்றைய சூழலில் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்களில் 95 விழுக்காட்டினர் பத்தாம் வகுப்பை முடித்தவர்களாக உள்ளனர். மாறாக 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டால், இந்த நிலை மாறி விடும். இத்தகைய பின்னடைவு தேவையா? என்று தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கல்வித்தரத்தை உயர்த்துவது என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால், அதற்கு  முன்பாக அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஊரகங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் 48% பள்ளிகள் ஈராசிரியர்களைக் கொண்ட பள்ளிகளாக உள்ளன. இவர்களில் ஓர் ஆசிரியர் பல நேரங்களில் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் சென்று விடும் சூழலில், மீதமுள்ள ஓர் ஆசிரியர் தான் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்த வேண்டும். இத்தகைய சூழலில் பயிலும் குழந்தைகளுக்கு 5-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.

நகர்ப்புறங்களில் ஒவ்வொரு ஆண்டு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி, வெளிநாட்டு மகிழுந்தில்  குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் சூழல் நிலவும் அதே வேளையில், அரசு சார்பில் வழங்கப் படும் சத்துணவுக்காகவும், சீருடைகளுக்காகவும் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழ்மைச் சமுதாயம் கிராமப்புறங்களில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்கு கற்றல் என்பது முழு நேரப் பணி அல்ல. தாய் தந்தையருக்கு அவர்களது பணியில் உதவி செய்து விட்டு, பின்னர் கிடைக்கும் நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வது தான் வழக்கம். இப்போதைய கல்வி முறையில் அவர்கள் பத்தாம் வகுப்பு வரையாவது படிப்பார்கள். பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டால் அவர்கள்  தொடக்கக்கல்வியைக் கூட முடிக்காமல் பெற்றோரின் தொழிலை செய்ய வேண்டிய சூழல் தான் ஏற்படும்.

இன்றையக் கல்விச் சூழல் மிகவும் மோசமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. ‘‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற பாரதியாரின் வரிகளுக்கு ஏற்க கல்விச் சேவை வழங்கிய காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. கற்பித்தல் என்பது காசு கொட்டும் தொழிலாகி விட்டது. நீட் தேர்வில் தொடங்கி அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளும் கொண்டு வரப்படுவதன் நோக்கம் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக அல்ல... மாறாக, அத்தேர்வுகளுக்கு தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்துவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதலாக வருமானம் ஈட்டித் தரும் தொழில் என்பதால் தான். 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு கொண்டு வந்தால், அத்தேர்வுகளுக்காக தனிப்பயிற்சி வகுப்புகளை உருவாக்கலாம்; அதன்மூலம் வணிக வட்டத்தை விரிவுபடுத்தலாம் என்ற சிந்தனை தான் இதற்குக் காரணமாகும். இந்த வணிகச் சதி வலையில் தமிழகக் குழந்தைகளை ஆட்சியாளர்கள் சிக்க வைத்துவிடக் கூடாது.

நீட் தேர்வு எந்த அளவுக்கு அர்த்தமற்றதோ, அதேபோல் தான் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் அர்த்தமற்றவை. நீட் தேர்வை எதிர்க்கும் தமிழக அரசு இந்தத் தேர்வுகளையும் எதிர்க்க வேண்டும். அதன்படி 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை பாட்டாளி மாணவர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட மற்றும் வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் நடைபெறும் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்று நடத்துவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி இளைஞர் சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்கள், கல்வியாளர்கள்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

More Stories

Trending News