தமிழகத்திற்கு முதல்வரால் ரூ.50 கோடி இழப்பு; இது நியாயமா? :ராமதாஸ் கேள்வி

தமிழக முதல்வருக்காக 450 புதிய பேருந்துகளை முடக்கி வைப்பு. இதனால் தமிழகத்திற்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இது மேலும் உயரும். இது நியாயமா? என தமிழக அரசிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Oct 3, 2018, 05:32 PM IST
தமிழகத்திற்கு முதல்வரால் ரூ.50 கோடி இழப்பு; இது நியாயமா? :ராமதாஸ் கேள்வி
Representational Image

தமிழக முதல்வருக்காக 450 புதிய பேருந்துகளை முடக்கி வைப்பு. இதனால் தமிழகத்திற்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இது மேலும் உயரும். இது நியாயமா? என தமிழக அரசிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதுக்குரித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்ட 450 பேருந்துகள் ஒரு மாதமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளால் தான் புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட வேண்டும் என்பதற்காக அவற்றை முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் மொத்தம் 19,490 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இவை தவிர 2254 உபரி பேருந்துகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக உள்ள 21,744 பேருந்துகளில் மூன்றில் இரண்டு பங்கு பேருந்துகள் காலாவதியானவை ஆகும். அவற்றுக்கு மாற்றாக இயக்குவதற்காக கடந்த 7 ஆண்டுகளில் 9153 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அவற்றில் பாதியளவுக்குக் கூட புதிய பேருந்துகள் இன்னும் வாங்கப்பட வில்லை. வாங்கப்பட்ட பேருந்துகளும் முழு அளவில் இயக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்காக வாங்கப்பட்டு கூடு கட்ட அனுப்பப்பட்ட பேருந்துகள் படிப்படியாக பணி முடித்து பணிமனைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஒன்றன்பின் 450 பேருந்துகள் கூடுகட்டி முடிக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் கோட்டத்தில் 101 பேருந்துகள், சேலம் கோட்டத்தில் 80, விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் தலா 60 பேருந்துகள், விழுப்புரம், காஞ்சிபுரம், சேலத்தில் தலா 20 பேருந்துகள் இயக்குவதற்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த இரு மாதங்களாக இந்த பேருந்துகள் இயக்கப்படாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளின் எண்ணிக்கை ஐநூறைக் எட்டியதும் அவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகளால் திறந்து வைக்க வேண்டும் என்பதில் போக்குவரத்து அமைச்சர் உறுதியாக இருப்பதால் அப்பேருந்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

புதியப் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு பேருந்தை இயக்குவதன் மூலம் தினமும் குறைந்தபட்சம் ரூ.20,000 வருவாய் ஈட்ட முடியும். மொத்தம் 450 பேருந்துகளை இயக்காததால் தினமும் ரூ.90 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. புதிய பேருந்துகளை வாங்கியதற்கான கடனுக்கு வட்டி, காப்பீடு உள்ளிட்ட செலவுகளையும் சேர்த்தால் தினமும் ரூ. 1 கோடி இழப்பு ஏற்படுகிறது. சுமார் 50 நாட்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டால் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இழப்பு மேலும் தொடரும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 0.13 காரணி மடங்கு கூடுதல் ஊதியம் கோரிய போது, அதை வழங்க அரசு மறுத்து விட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் புதிய பேருந்துகளை முதலமைச்சர் தான் தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக ரூ.50 கோடி இழப்பை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.

கடந்த 2014-ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா, மீண்டும் முதலமைச்சர் ஆன பிறகு தான் புதிய பேருந்துகளை தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது தொடங்கிய கலாச்சாரம் இன்று வரை நீடிக்கிறது. கடந்த ஜூலை 3-ஆம் தேதி 542 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதற்காக தமிழகம் முழுவதிலுமிருந்து 542 பேருந்துகளும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. அதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் முதலமைச்சரின் விளம்பர மோகத்துக்காக ரூ.50 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதேநிலை நீடித்தால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மீட்க முடியாத அளவுக்கு கடன் சுமையில் சிக்கி விடும்.

எனவே, இனியும் தாமதிக்காமல் புதிதாக வாங்கி இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் 450 பேருந்துகளை அந்தந்த பணிமனைகளில் சிறிய அளவில் விழா நடத்தி இயக்கி வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கூடு கட்டி வரும் பேருந்துகளை ஒரு நாள் கூட நிறுத்தி வைக்காமல் உடனடியாக சேவையில் ஈடுபடுத்துவதை போக்குவரத்துக் கழகங்கள் வாடிக்கையாக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.