ஜனாதிபதி விழாவில் அனுமதி மறுப்பு; தங்கப் பதக்கத்தை திருப்பி அளித்த மாணவி ரபிஹா

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவில் ஹிஜாப் அணிந்து வந்ததால் அனுமதி மறுப்பு. பட்டம் போதும்.. தங்கப் பதக்கத்தை வேண்டாம் என திருப்பி அளித்த இஸ்லாமிய மாணவி ரபிஹா

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 23, 2019, 07:35 PM IST
ஜனாதிபதி விழாவில் அனுமதி மறுப்பு; தங்கப் பதக்கத்தை திருப்பி அளித்த மாணவி ரபிஹா title=

புது டெல்லி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். ஆனால் இந்த நிகழ்சியில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதாவது முதுநிலை பட்டபடிப்பில் தங்க பதக்கம் வென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ரபியா தலையில் ஹீஜாப் அணிந்து பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் தலையில் அணிந்திருந்த ஹீஜாப்பை அகற்றினால் தான் அனுமதி என்று கூறியுள்ளனர். ஆனால் மாணவி ரபியா மறுப்பு தெரிவித்ததால், அவரை அரங்கத்துக்குள் நுழைய விடவில்லை. இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். 

அதன்பிறகு பல்கலைக்கழகத்தில் 27 வது பட்டமளிப்பு விழா நிறைவு செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திரும்பி சென்றுள்ளார். அதன பிறகு தான் மாணவிக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவரை அழைத்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பட்டத்தையும், தங்க பதக்கத்தையும் வழங்கினர். அப்பொழுது தனக்கு ஏற்பட்ட அவமானத்தை குறித்து முறையிட்டார்.

பிறகு இஸ்லாமிய மாணவி ரபியா தனது பட்டத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, தங்க பதக்கத்தை நிராகரித்தார். இந்த சம்பவம் புதுச்சேரியில் மட்டுமில்லை தமிழகத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மாணவி ரபியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிந்து வருகின்றனர். 

மாணவிகளை பாராட்டிய குடியரசு தலைவர்: 
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியது, "தங்கப் பதக்கங்களை 10 மாணவர்களுக்கு மட்டுமே வழங்குவதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர்களில் ஒன்பது பேர் பெண்கள் என்பதை நான் கவனித்தேன். வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 189 மாணவர்களில் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்களில் 137 பெண்கள், மீதமுள்ள 52 பேர் ஆண்கள் என்று கூறினார்.

இந்த அற்புதமான நிகழ்வு நம் நாட்டின் எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது. மேலும் இது எங்கள் மகள்களின் தலைமை குணங்களையும் பிரதிபலிக்கிறது. நான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஜனாதிபதி சுமார் 10 நிமிடங்கள் உரையை நீடித்தார்.

பல்கலைக்கழகத்தின் தூய்மைத் திட்டத்தை பாராட்டினார்:
"வளாகத்தில் ஸ்வச் பாரத்தை அமல்படுத்திய முதல் பல்கலைக்கழகமாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் திகழ்கிறது. மேலும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சமர்ப்பித்திருந்தது" என்று ஜனாதிபதி கூறினார்.

‘மாநிலத்தில் கல்வி வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் புதுச்சேரி முதலமைச்சர் வி நாராயணசாமியின் பங்களிப்பை அவர் பாராட்டினார்.’ இந்த நிகழ்வில் ‘நர்மதா’ என்ற பெயரில் ஒரு பெண்ணின் விடுதி திறக்கப்படுவதையும் ஜனாதிபதி அறிவித்தார்.

இந்த நிகழ்சியில் லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி, முதலமைச்சர் வி நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் எம் ஓ எச் எஃப் ஷாஜகான், கல்வி அமைச்சர் ஆர்.கமலகண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி வைதிலிங்கம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த என் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

முன்னதாக புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்த அவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News